பா.ஜ.க கட்சி தரப்பில் ’தி கேரளா ஸ்டோரி’ படம் நேற்று இரவு பெங்களூருவில் திரையிடப்பட்டது. அப்போது படம் பார்த்த பா.ஜ.க தலைவர் ஜே.பி நட்டா இந்த படம் ஆயுதம் இல்லாத புதிய வகை தீவிரவாதத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது என தெரிவித்தார்.

  






இது தொடர்பாக பேசிய ஜே.பி நட்டா “தி கேரளா ஸ்டோரி படத்தை பார்த்தேன். இந்த படம் புதிய வகை பயங்கரவாதம் பற்றி எடுத்துரைத்துள்ளது. பயங்கரவாதத்திற்கு தோட்டாக்கள், வெடிகுண்டுகள் மற்றும் தானியங்கி ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆயுதங்களே இல்லாத புதிய வகை பயங்கரவாதம் உள்ளது. இத்தகைய ‘விஷ’ பயங்கரவாதத்தையும் அதன் பின்னணியில் உள்ள சதியையும் இந்தப் படம் வெற்றிகரமாக அம்பலப்படுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், இந்த 'புதிய வகை பயங்கரவாதம்' ஒரு குறிப்பிட்ட மாநிலம் அல்லது மதத்துடன் தொடர்புடையதாக இருக்கக்கூடாது என்று நட்டா எச்சரித்தார்.


”நம் இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்பட்டு, திரும்ப முடியாத நிலையை அடைகின்றனர்.  அவர்களுக்கும், சமுதாயத்துக்கும், இந்தப் படம் ஒரு நல்ல முன்னுதாரணமாக அமைந்துள்ளது. கட்டாயமாக அனைவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும், ”என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.


1990 களில் ஜம்மு காஷ்மீரில் இருந்து காஷ்மீரி பண்டிட்கள் வெளியேறியதை அடிப்படையாகக் கொண்ட 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ போலவே, 'தி கேரளா ஸ்டோரி'யும் பிரதமர் நரேந்திர மோடி உட்பட ஆளும் கட்சியால் பெரிதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கும் மத்தியப் பிரதேசத்தில், இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், படத்திற்கு வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்சித் தலைவர்களும் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் பாஜக தலைவர் ஜே பி நட்டா அவர்கள் படத்தை புகழ்ந்து பேசியுள்ளார்.


சுதிப்தோ சென் இயக்கி, விபுல் அம்ருத்லால் ஷா தயாரித்த, 'தி கேரளா ஸ்டோரி' மே 5 அன்று திரையரங்குகளில் வெளியானது. அதன் டீசரில், தென் மாநிலத்தைச் சேர்ந்த 32,000 க்கும் மேற்பட்ட பெண்கள் இஸ்லாமிய தேசத்திற்கு (IS) ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தயாரிப்பாளர்கள் தங்கள் சமூக ஊடக பக்கத்தில் இருந்து டீசரை அகற்றுவதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.