கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி 137 இடங்களிலும், பாஜக 63 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 20 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதனால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலத்தில் நேரடியாக காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் வெற்றிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள். கர்நாடக மக்கள் வாக்களித்தபோது, நியாயப்படுத்த முடியாத வகையில் சகோதரர் ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்றத்தில் இருந்து பதவிநீக்கம் செய்தது, நாட்டின் முதன்மைப் புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தியது, இந்தித் திணிப்பு, பெருமளவிலான ஊழல் என அனைத்தும் அவர்கள் மனதில் எதிரொலித்திருக்கிறது.
பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி அவர்கள் தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர். திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. அடுத்து, 2024 பொதுத்தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்! இந்தியாவில் மக்களாட்சியையும், அரசியலமைப்பு விழுமியங்களையும் மீட்போம்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.