தமிழ்நாட்டுக்கு நாளை முதல் 8,000 கன அடி காவிரிநீர் திறக்க கர்நாடக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


அனைத்துக்கட்சி கூட்டத்தில் முக்கிய முடிவு: வரும் ஜூலை 31ஆம் தேதி வரை, பிலிகுண்டுலுவில் தமிழ்நாட்டுக்காக தினமும் 11,500 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது. ஆனால், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில், நாளை முதல் 8,000 கன அடி காவிரிநீர் மட்டுமே திறக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை தொடர்ந்து அவசர கூட்டத்திற்கு சித்தராமையா அழைப்பு விடுத்திருந்தார்.


அவசர கூட்டத்தில் அனைத்துக்க்கட்சி கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


கர்நாடக முதலமைச்சர் விளக்கம்: இந்த கூட்டத்தில்தான், தமிழ்நாட்டுக்கு காவிரிநீர் திறந்துவிடும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பரிந்துரைக்கப்பட்ட அளவை விட குறைவான அளவில் தண்ணீரை திறந்து விட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்துக்கட்சி கூட்டத்தை தொடர்ந்து பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, "இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், பாஜக தலைவர்கள் மற்றும் மைசூரு படுகையில் உள்ள தலைவர்கள் கலந்து கொண்டனர்.


தண்ணீர் விடக்கூடாது என்றும், காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர். தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு 8,000 கனஅடி தண்ணீர் திறந்து விடலாம் என்றும், மழை பெய்தால் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வோம் என்றும் சட்டக்குழு குழு உறுப்பினர் மோகன் கட்டார்கி கருத்து தெரிவித்தார். அதையே முடிவாக எடுத்துள்ளோம்" என்றார்.


பின்னர் பேசிய கர்நாடக துணை முதலமைச்சர் டி. கே. சிவகுமார், "மிக ஆரம்ப நிலையில், ஒழுங்குமுறை ஆணையம் கூட்டம் நடத்தி ஒரு டிஎம்சி தண்ணீர் தர வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். எங்களுக்கு 30% தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. கண்காணிப்பு குழுவிடம் முறையிடுவோம்" என்றார்.