கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் அலுவலக அதிகாரி ஒருவர் தீபாவளியை முன்னிட்டு சில பத்திரிகையாளர்களுக்கு 1 லட்சம் ரூபாய் முதல் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை பணத்தை பரிசாக அளித்ததாகவும் புகார் எழுந்துள்ளது. பரிசு பணத்துடன் இனிப்புகளை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.


முதலமைச்சர் அலுவலக அதிகாரி ஒருவர், சில பத்திரிகையாளர்களுக்கு பணத்தை லஞ்சமாக அளித்ததாக கூறப்படும் விவகாரத்தில் நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டும் என எதிர்கட்சி காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை பாஜக நிராகரித்துள்ளது. 


பரிசுகளை பெற்றதாகக் கூறப்படும் ஒரு டஜன் பத்திரிகையாளர்களில் மூன்று பேர் அந்த அதிகாரியிடமே பணத்தை திருப்பி கொடுத்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.


பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் ஊடக ஆலோசகர் மீது ஊழல் எதிர்ப்பு ஆர்வலர் குழு கர்நாடக லோக்ஆயுக்தா போலீசில் புகார் அளித்துள்ளது.


 






பரிசை திருப்பி கொடுத்த பத்திரிகையாளர்களில் ஒருவர் செய்தி இணையத்தளத்திற்கு அளித்த பேட்டியில், "எனக்கு இதே போன்ற ஸ்வீட் பாக்ஸ் ஒன்று கொடுக்கப்பட்டது. அதை திறந்து பார்த்தபோது அதில் ₹ 1 லட்சம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது.


நான் அதை எனது செய்தி ஆசிரியர்களிடம் தெரிவித்தேன். இதை ஏற்க முடியாது என்றும் இது தவறு என்றும் நான் முதலமைச்சர் அலுவலக அதிகாரியிடம் கூறினேன்" என்றார்.


இந்த விவகாரத்தில் ஆளும் பாஜக அரசை விமர்சித்துள்ள காங்கிரஸ், "வரி செலுத்துவோரின் பணத்தை தவறாக பயன்படுத்தி லஞ்சம் கொடுக்கப்பட்டதா? இந்தப் பணம் எங்கிருந்து வந்தது? எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது, அதற்கு ஈடாக நீங்கள் என்ன பெற்றீர்கள்? முதலமைச்சர் பொம்மையை நாங்கள் காரணமின்றி 'PayCM' என்று அழைக்கவில்லை" என குறிப்பிட்டுள்ளது.


இந்த விவகாரம் தொடர்பாக, ஜெய்ராம் ரமேஷ், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பாஜக அரசாங்கத்திடம் விளக்கம் கோரியுள்ளனர்.


இதுகுறித்து சுர்ஜேவாலா தனது ட்விட்டர் பக்கத்தில், "முதலமைச்சர் பொம்மை மற்றும் அவரது அதிகாரியின் லஞ்சத்தை அம்பலப்படுத்திய கர்நாடகாவின் துணிச்சலான எழுத்தாளர்களுக்கு தலை வணங்குகிறோம்" என பதிவிட்டுள்ளார். இதற்கிடையில், காங்கிரஸ் கட்சிக்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக "இந்த குற்றச்சாட்டு உண்மைக்கு வெகு தொலைவில் உள்ளது" என்று கூறியுள்ளது.