ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரில் நேற்று மின் திட்ட சுரங்கப்பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். நிலச்சரிவு ஏற்பட்டவுடன் சுரங்கப்பாதைக்கு விரைந்த மீட்புக்குழுவை சேர்ந்த 6 பேரும் அங்கு சிக்கியுள்ளனர்.


முன்னதாக, நான்கு பேர் நிலச்சரிவில் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதில், மூவர் மீட்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு சென்று, மின் விளக்குகளின் உதவியோடு சிக்கியவர்களைத் தேடி மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


 






சமீபத்தில், ஹரியானா மாநிலம் பிவானி பகுதியில் அமைந்துள்ள கல்குவாரி ஒன்றில் மிகவும் மோசமான நிலச்சரிவு எற்பட்டுள்ளது. இதனையடுத்து, மீட்பு பணிகளை  அம்மாநில அரசு துரிதப்படுத்தியது. ஏராளமானோர் இந்த நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியிருந்தது.


கல்குவாரியில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து வருத்தம் தெரிவித்த அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால், “பிவானி பகுதியில் ஏற்பட்ட எதிர்பாராத நிலச்சரிவு மிகவும் வருத்தம் அளிக்கிறது. மீட்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நிலச்சரிவில் சிக்கிக் கொண்டுள்ளவர்களை மீட்கும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என தெரிவித்திருந்தார்.


ஆனால், மீட்புப் பணிகளில் மாவட்ட நிர்வாகம் அலட்சியம் காட்டியதாக டோஷம் சட்டப்பேரவை உறுப்பினர்  கிரண் சவுத்திரி குற்றம் சாட்டினார்.  இதுகுறித்து, அவர் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் , " நிலச்சரிவில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது என்ற தகவல் இதுவரை இல்லை. 


ஆனால், நிலச்சரிவில் சிலர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியானது. மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனம் காரணமாக நிலச்சரிவில் சிக்கிக் கொண்டுள்ளவர்களை மீட்கும் பணிகள் தாமதமாகின. விதிமுறைகளை மீறி, ஹரியானா மாநிலத்தில் சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  


தேசிய பசுமை தீர்ப்பாயம் ஏற்கனவே பிவாணி பகுதியில் சுரங்கம் தோண்டும் பணிகளுக்குத் தடை விதித்திருந்தது" என தெரிவித்திருந்தார்.


அதேபோல, மணிப்பூர் நோனி மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் உள்பட பலர் நிலச்சரிவில் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. துபுல் யார்டு ரயில்வே கட்டுமான தளத்திற்கு அருகிலுள்ள 107 பிராந்திய இராணுவ (TA) முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 16 பேர் உயிரிழந்தனர். 


இறந்தவர்களில் ராணுவ வீரர்களும் அடங்குவர். இதையடுத்து, துப்புல் யார்டு ரயில்வே கட்டுமானப் பகுதியின் கீழ் ஆற்றில் இருந்து உடல்களை மீட்கும் பணியில் அகழ்வாராய்ச்சிக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டது.