முதலமைச்சர் பி.எஸ்.யெடியுரப்பாவுக்கு பல தலைவர்கள் வெளிப்படையாக சவால் விடுத்து கர்நாடக பாஜகவில் கருத்து வேறுபாடுகள் பல மாதங்களாக வளர்ந்து வருகின்றனர். 


கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு எதிராக ஆளும் பாஜகவினரே கருத்துகள் கூறி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது, உடல்நலக்குறைவு காரணமாக முதலமைச்சர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்ய முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கடந்த இரண்டு ஆண்டுகளாக கர்நாடக முதலமைச்சராக இருக்கும் எடியூரப்பாவுக்கு எதிராக ஆளும் பாஜகவினரே கருத்துகள் கூறி வருகின்றனர். அம்மாநிலத்தின் சுற்றுலா துறை அமைச்சர் யோகஷ்வர், பாஜக எம்எல்ஏக்கள் பசனகவுடா எத்னால், அரவிந்த் பெல்லத் உள்ளிட்டோர் பகிரங்கமாக ஊடகங்களிலும், பொது மேடைகளிலும் எடியூரப்பாவை விமர்சித்து வருகின்றனர். எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரர் நிர்வாகத்தில் தலையிடுவதாகவும் அவர்கள் புகார் கூறினார். 


இந்த நிலையில், எடியூரப்பா நேற்று தனது மகன் விஜயேந்திரவுடன் அவசரமாக டெல்லிக்கு புறப்பட்டுச் சென்று, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, மாநில விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், பெங்களூரு புற வளைய சாலை திட்டம் மற்றும் மேகதாது திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்தும் விவாதித்ததாக கூறப்படுகிறது.


இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது, உடல்நலக்குறைவு காரணமாக முதலமைச்சர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்ய முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் உடனான சந்திப்புக்கு பிறகு எடியூரப்பா செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவரிடம், தலைமை மாற்றம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “தலைமை மாற்றம் குறித்து எந்த வதந்தியும் எனக்கு தெரியாது. நீங்களே சொல்லுங்கள்” என்று பதில் அளித்தார்.


 






சமீபத்தில், பாஜகவின் மாநில பொறுப்பாளர் அருண் சிங், மாநிலத்திற்கு சென்று ஆளும் கட்சியின் எம்எல்ஏக்களை சந்தித்தார். முதலமைச்சருக்கு கட்சித் தலைமையின் ஆதரவு இருப்பதை சுட்டிகாட்டிய அவர். எடியூரப்பாவும், அவரது அரசாங்கமும் நல்ல பணிகளைச் செய்து வருவதாகக் கூறினார்.


எடியூரப்பாவுக்கு 78 வயது ஆகிவிட்டதால் முதலமைச்சர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என்று பாஜக எம்எல்ஏக்களிடம் கையெழுத்து பெற்று மேலிடத்துக்கு அனுப்பினார்கள். இதனால் அருண் சிங் கடந்த மாதம் பெங்களூருவில் அதிருப்தியாளர்களை சமாதனப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஒரு சக்திவாய்ந்த லிங்காயத் தலைவரான எடியூரப்பா தனக்கு எதிரான கருத்து வேறுபாட்டைக் குறைத்து வருகிறார். ஒன்று அல்லது இரண்டு பேர் ஊடகங்களில் ஏதேனும் சொல்வது தவறான புரிதலை உருவாக்குகிறது என்று மூத்த தலைவர் கடந்த மாதம் கூறினார். இது புதியதல்ல என்றும் ஆரம்பத்தில் இருந்தே நடந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.


 






கர்நாடக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படும் தகவலில் உண்மையில்லை என்று எடியூரப்பா கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் நட்டாவை  சந்தித்த நிலையில் வெளியான தகவலுக்கு எடியூரப்பா மறுப்பு கூறியுள்ளார். முன்னதாக, கர்நாடகாவின் புதிய முதமைச்சராக முருகேஷ் நிரானி நியமிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.