மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை, கர்நாடக சட்டமன்றத்தில் முதலமைச்சர் சித்தராமையா அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்துக்கும், கர்நாடகாவுக்கும் காவிரி நதிநீர் பங்கீடு, மேகதாது அணை பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதற்கு தீர்வாக, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புப்படி உரிய காலத்தில் தமிழக அரசுக்கு கர்நாடக அரசு காவிரி நீரை திறந்து விட வேண்டும். ஆனால், ஜூன் மாதம் கிடைக்க வேண்டிய 12 டிஎம்சி நீர் இதுவரை தமிழகத்துக்கு கிடைக்கவில்லை. இதனால், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளாக இருக்கும் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இப்படி ஒருபக்கம் காவிரி நீர் பிரச்சனை இருக்கும் நிலையில், மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அங்கு புதிதாக ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சட்டமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தல் அம்மாநில முதலமைச்சரும், நீர்வளத்துறை அமைச்சருமான சித்தராமையா, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மேகதாது அணை கட்டும் திட்டம் தொடர்பாக அறிவிக்கப்பட்டது. சட்டமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், மேகதாது அணை கட்ட அனுமதி கோரி மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாகவும், விரைவில் மேகதாது அணை கட்ட மத்திய அரசின் அனுமதி பெற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மேகதாது அணை கட்டினால் காடுகள் அழிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், இழப்பீடாக காடு வளர்க்க நிலம் கண்டறியப்பட்டு, அதை கையக்கப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்படும் என்றார். மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அணை விவகாரத்தில் கர்நாடக அரசு தீவிரம் காட்டுவது நிலமையை மேலும், பரபரப்பாக்கியுள்ளது.
நேற்றுமுன் தினம் டெல்லி சென்ற தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், காவிரி நீர் விவகாரம் மற்றும் மேகதாது அணை கட்டுவதை நிறுத்துவது குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் பேசி இருந்தார். இந்த சூழலில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட தீவிரம் காட்டி சட்டமன்றத்தில் அறிவிப்பை வெளியிட்டு இருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.