அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை, குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


நீதிமன்றம் உத்தரவு:


அவதூறு வழக்கில் சூரத் கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை கோரி, ராகுல் காந்தி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மோடி சமூகத்திற்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்புக்கு தடை கோரிய மனுவை சூரத் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து கடந்த ஏப்ரல் மாதம் குஜராத் உயர்நீதிமன்றத்தை ராகுல் காந்தி நாடி இருந்தார். இந்நிலையில், ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளது. இதையடுத்து, ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


தீர்ப்பு விவரம்:


ராகுல் காந்தியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி “சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது தான். அதில் தலையிட விரும்பவில்லை. அவருக்கு எதிராக குறைந்தது 10 கிரிமினல் வழக்குகள் உள்ளன” என தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட முடியாது அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் அந்தஸ்து பறிக்கப்பட்டதை  ரத்து செய்யக் கோர முடியாது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.


வழக்கின் விவரம்:


கடந்த 2019ம் ஆண்டுநடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலின் போது கர்நாடகா மாநிலம் கோலாரில் நடைபெற்ற பரப்புரை பொதுக் கூட்டத்தில் பேசிய அப்போதையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாட்டை விட்டு தப்பி ஓடுகிற மோசடி பேர்வழிகள் மோடி என்ற பெயர் கொண்டவர்களாகவே இருக்கின்றனர் என பேசியதாக கூறப்படுகிறது. அவரது இந்த பேச்சு மோடி சமூகத்தை இழிவுபடுத்துவதாக,  குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.


சிறை தண்டனையும் - பதவி பறிப்பும்:


இந்த அவதூறு வழக்கு 4 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில், திடீரென கடந்த மார்ச் 23-ந் தேதி வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.  மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றால் அவரது பதவி பறிபோகும். அதனடிப்படையில், சூரத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் பேரில் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி உடனடியாக பறிக்கப்பட்டது. 


மேல்முறையீடு தள்ளுபடி:


 கீழமை நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஏப்ரல் 3ம் தேதி சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். அதை விசாரித்த சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம்,  மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.


உயர்நிதிமன்றத்தில் வழக்கு:


இதையடுத்து, சூரத் மாவட்ட நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மற்றொரு மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தார்.  வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனை எனும் கீழமை நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.