அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்களுக்கு கொலை மிரட்டல் விடுவது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில், பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வெடிகுண்டு மிரட்டலால் கர்நாடகாவில் பரபரப்பு:
பிரதமர், உ.பி. முதலமைச்சரை கொலை செய்துவிடுவேன் எனக் கூறி பிரபல ஊடகம் ஒன்றுக்கு மாணவர் ஒருவர் மெயில் அனுப்பியிருந்தார். இந்த நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா உள்ளிட்டவர்களுக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Shahidkhan10786@protonmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர் மிரட்டல் விடுத்துள்ளார். அந்த மெயிலில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது, "படத்திற்கு முன்பு வரும் டிரெய்லரைப் பற்றி உங்கள் எண்ணங்கள் என்ன? நீங்கள் எங்களுக்கு 2.5 மில்லியன் டாலர்களை (20 கோடி ரூபாய்க்கு மேல்) வழங்கவில்லை என்றால், கர்நாடகம் முழுவதும் பேருந்துகள், ரயில்கள், கோயில்கள், ஹோட்டல்கள் மற்றும் பொது இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும்.
உங்களுக்கு ஒரு டிரெய்லரைக் காட்ட விரும்புகிறோம். அம்பாரி உத்சவ் பேருந்தை வெடிக்க வைக்க போகிறோம். அம்பாரி உத்சவ் பேருந்து குண்டுவெடிப்புக்குப் பிறகு, சமூக வலைதளங்களில் எங்கள் கோரிக்கைகளை எழுப்புவோம். உங்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலின் ஸ்கிரீன் ஷாட்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றும். அடுத்த, வெடிகுண்டு எங்கு வெடிக்கும் என்பதி பற்றிய தகவலை ட்வீட் செய்வோம்"
பதற்றத்திற்கு காரணமான இ-மெயில்:
இது தொடர்பாக பெங்களூரு நகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை கொலை செய்து விடுவேன் என மிரட்டும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டதற்காக முகமது ரசூல் கதாரே என்ற ஒருவரை கர்நாடக போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் யாத்கிரியில் உள்ள சுர்பூர் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட பிறகு, முகமது ரசூல் கதாரே கைது செய்யப்பட்டார். இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும் வழக்கறிஞருமான நளின் கோலி கூறுகையில், "பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கூற விரும்புபவர்களும், பிரதமர் மோடிக்கு உயிருக்கு அச்சுறுத்தல் விடுப்பவர்களும், உணவகத்தில் வெடிகுண்டுகளை வைப்பவர்களும், கர்நாடகாவில் திடீரென வரத் தொடங்கியுள்ளனர். கர்நாடக காவல்துறையும் மற்ற ஏஜென்சிகளும் விசாரணை செய்து செய்கின்றன. ஆனால் இவை அனைத்திற்கும் பின்னால் உள்ள மனநிலை என்ன?" என்றார்.
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை குண்டு வெடித்தது. இதில் 9 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.