அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக இந்தாண்டு பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. அந்த வகையில், ஆண்டின் தொடக்கத்தில், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க. அல்லது பா.ஜ.க. அங்கும் வகிக்கும் கூட்டணியே ஆட்சி அமைத்தது.


முக்கியத்துவம் வாய்ந்த கர்நாடக தேர்தல்:


அதற்கு அடுத்தபடியாக, கர்நாடகாவில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது. தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகம் என்பதால், இன்றைய தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது. இதற்கான முடிவுகள், 13ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.


மும்முனை போட்டியில் முந்தபோவது யார்?


கர்நாடக அரசியலை பொறுத்தவரையில் பல ஆண்டு காலமாக அங்கு மும்முனை போட்டியே நிலவி வருகிறது. மாநிலம் முழுவதும் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நிலவினாலும் பழைய மைசூரு பகுதியில் மட்டும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்ற இரண்டு கட்சிகளுக்கு பெரும் சவால் விடுத்து வருகிறது.


பெங்களூர் (கிராமப்புறம்) தொடங்கி சாமராஜநகர் மாவட்டம் வரையில், பழைய மைசூரு பகுதி நீள்கிறது. 61 தொகுதிகளை கொண்ட பழைய மைசூரு பகுதிதான், அடுத்த ஆட்சி அமைக்க போவது யார் என்பதை தீர்மானிக்க போகிறது. மற்றபடி, கடலோர கர்நாடகம், மும்பை கர்நாடகம், ஹைதராபாத் கர்நாடகம், பெங்களூரு ஆகிய பகுதிகளில் பாஜக, காங்கிரஸ் கட்சிக்கே போட்டி என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.


முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள்:


மற்ற மாநிலங்களை போல, காங்கிரஸ், எப்போதும் போல், உள்ளூர் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளித்தே கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்டது. அதேபோல, பாஜக, தேசிய பிரச்னைகளை மையப்படுத்தி பிரச்சாரத்தை மேற்கொண்டது.


பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் நட்டா, அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் ஆகியோர் அக்கட்சிக்கு ஆதரவாக தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சிக்காக, அதன் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


வாக்குப்பதிவு நிலவரம்:


பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடத்தப்பட்ட கர்நாடக தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்போது நிறைவு பெற்றுள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி, 65.69 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கிராமப்புறங்களில், மக்கள் எப்போதும் போல ஆர்வத்துடன் வாக்களித்த போதிலும் நகர்ப்புறங்களில் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. குறிப்பாக, மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் குறைவான அளவிலேயே வாக்குகள் பதிவாகி இருக்கிறது. யஷ்வந்த்பூர் தொகுதியில் அதிகபட்ச வாக்கு சதவிகிதம் பதிவாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.