கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட பாஜக வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது. 


கர்நாடகாவில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சிக்காலம் இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வர உள்ள நிலையில் அங்கு மே மாதம் 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடகா மாநிலம் மட்டும் தான் தென்னிந்தியாவில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் ஆகும்.  


மேலும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தென்னிந்தியாவில் வெற்றியை பிரதிபலிக்க கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால், இந்த தேர்தலில் வெற்றி பெற ஆளுங்கட்சியான பா.ஜ.க.வும், மீண்டும் ஆட்சியை பிடிக்க எதிர்க்கட்சியான காங்கிரஸூம் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அங்கு தேர்தல் களம் களைக்கட்ட தொடங்கியுள்ளது. 


குறிப்பாக பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவதை இலக்காகக் கொண்டுள்ள பாஜக, மொத்தமுள்ள 224 இடங்களில் குறைந்தபட்சம் 150 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது. இப்படியான சூழலில் கர்நாடகா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியாகியுள்ளது. 189 பேர் கொண்ட அந்த வேட்பாளர் பட்டியலில் 52 பேர் புதிதாக களம் காண்கின்றனர்.


குறிப்பாக இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பளிக்க வேண்டுமென்ற அடிப்படையில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் முன்னுரிமை அளிக்கப்பட்டதாக அம்மாநில தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.இந்த முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 32 வேட்பாளர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், 46 பேர் பட்டியலினத்தவர், மற்றும் 8 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். 


வரும் சட்டமன்ற தேர்தலில் கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பாரம்பரியமிக்க ஷிக்கான் தொகுதியில் போட்டியிடுகிறார். இதேபோல் முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான பிஎஸ் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிடுகிறார்.அதேபோல் பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி தனது பாரம்பரியமிக்க சிக்மகளூர் தொகுதியில் போட்டியிடுகிறார். 


இதேபோல் சிக்கபல்லாபூர் தொகுதியில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சுதாகர் கே போட்டியிடுகிறார். மேலும் மல்லேஸ்வரம் தொகுதியில் அமைச்சர் டாக்டர் அஸ்வத்நாராயணன் போட்டியிடுகிறார்.  அமைச்சர் ஆர் அசோகா பத்மநாபநகர் மற்றும் கனகபுரா ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 13 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் வரும் நாட்களில் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: Karnataka Assembly Election: சூடுபிடிக்கும் கர்நாடகா தேர்தல் களம்.. இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் கட்சி..