நாடு முழுவதும் கார்கில் போரின் 24 ஆம் ஆண்டு வெற்றி தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.


கார்கில் போர் கடந்த 1999 ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதி முதல் ஜூலை 26 ஆம் தேதி வரை நடைபெற்றது. கார்கில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் உள்ள இந்திய பகுதியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருந்த பாகிஸ்தான்   காஷ்மீரில் இருந்து லடாக்கைத் துண்டித்து, சியாச்சின் பள்ளத்தாக்கு மக்களை கைப்பற்ற திட்டமிட்டிருந்தது. இதனால் கார்கிலை பாதுகாக்க கார்கில்-திராஸ் பகுதிக்கு 30 ஆயிரம் படைகளை அனுப்பி இந்திய அரசு அனுப்பி வைத்தது. 






பாகிஸ்தான் ஆக்கிரமித்திருந்த நிலைகளை இந்திய விமானப்படை குண்டுவீசி தாக்கிய நிலையில்,  இதற்கு அப்போதைய பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் பர்வேஸ் முஷரஃப், லெப்டினன்ட் ஜெனரல் மஹ்மூத் அஹ்மத், மேஜர் ஜெனரல் ஜாவேத் ஹசன், ஜெனரல் அஷ்ரப் ரஷீத் ஆகியோர் மூளையாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இந்தியாவின் தாக்குதலால் ஆக்கிரமிப்பு பகுதியை விட்டு ஜூலை 26 ஆம் தேதி பாகிஸ்தான் படைகள் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டதால் இந்த போர் முடிவுக்கு வந்து இந்தியா வெற்றி பெற்றது. 






கார்கில் போரின் போது 527 வீரர்கள் தங்கள் இன்னுயிரை நீத்தனர். ஒவ்வொரு ஆண்டும் கார்கில் வெற்றி விஜய் திவாஸ் என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜூலை 26 ஆம் தேதியான இன்று கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள நினைவிடத்தில் முப்படைத் தளபதிகள் போரில் உயிர்நீத்த வீரர்கள் மற்றும் தியாகிகளுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதேபோல் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். 






தொடர்ந்து குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரௌபதி முர்முவும், பிரதமர் மோடியும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் விஜய் திவாஸ் கொண்டாட்டத்தை நினைவு கூறும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.