மத்திய அரசின் கடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை அடுத்து பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்துள்ளன. அந்த வரிசையில் அறிவியல் உபகரணங்களுக்கான ஜிஎஸ்டி வரியும் அதிகரித்துள்ளது. இதற்கிடையே இதுகுறித்து விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "கப்பர் சிங் டேக்ஸால் (Gabbar singh tax- GST) அறிவியல் பாதிக்கப்பட வேண்டாம்" என்று கூறியுள்ளார்.
அண்மையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 47வது கூட்டம் நடைபெற்றதில் பல முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில் அத்தியாவசிய பொருட்களின் மீது 5% ஜிஎஸ்டி விதிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஜிஎஸ்டி விகித உயர்வு ஜூலை 18ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
பேக்கிங் செய்யப்பட்ட பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி :
பிராண்டிங் மற்றும் பேக்கிங் செய்யப்பட்ட தயிர், பால், பன்னீர், லஸ்ஸி, சீஸ், கோதுமை மாவு, அரிசி, வெள்ளம், தென், அப்பளம், மீன், இறைச்சி போன்ற பல அத்தியாவசிய பொருட்களின் மீதும் இந்த ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதால் அதன் விலை உயர்ந்துள்ளது. இது சாமானிய மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் இந்த 5% ஜிஎஸ்டி விதிப்பானது, பிராண்டிங் மற்றும் பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களுக்கு மட்டும் தான் பொருந்தும். பிராண்டிங் மற்றும் பேக்கிங் செய்யப்படாத பொருட்களில் எந்த ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிஎஸ்டி விகிதம் திருத்தப்பட்டதால் சில பொருட்களின் விலை உயர்ந்தாலும் சில பொருட்களின் விலை சற்று குறையவும் வாய்ப்புள்ளது. விற்பனையாளர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் சில குறிப்பிட்ட பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விலக்கப்பட்டுள்ளது. ஆபரேட்டர்கள் உடன் இணைக்கப்பட்ட சரக்கு வண்டிகளின் வாடகைக்கு வழங்கப்பட்டு வந்த ஜிஎஸ்டி வரி 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கண்களுக்கான லென்ஸ், எலும்பு முறிவிற்கு பயன்படுத்த கூடிய சாதனங்கள், உடலில் பொருத்தப்படும் செயற்கை பாகங்கள் உள்ளிட்ட பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைய கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒருபக்கம் இருப்பினும் பரிசோதனைக் கூடங்களில் உபயோகிக்கப்படும் கருவிகள் போன்ற அறிவியல் உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதை அடுத்து இதுகுறித்து தற்போது இந்த வரி உயர்வால் அறிவியல் பாதிக்கபப்டக் கூடாது என ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.