விஞ்ஞான உலகம், நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தாமல் இருந்தது கிடையாது. மனித உலகை வியக்க வைக்கும் வகையில் அறிவியல் உலகம் தொடர்ந்து இயங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நோயாளிகளை இசையின் மூலம் குணப்படுத்த எய்ம்ஸ் டெல்லி மற்றும் ஐஐடி டெல்லி ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். 


வியக்க வைக்கும் விஞ்ஞான உலகம்:


மூளை பக்கவாதத்தால் (brain stroke) பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்திய இசையின் மூலம் பேச கற்றுக்கொடுக்க உள்ளார்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள். இசையின் மூலம் சிகிச்சையா (மியூசிக் தெரபி) என பலரும் வியந்து வருகின்றனர். மியூசிக் தெரபி என்றால் என்ன, நோயாளிகளை குணப்படுத்த அது எந்தளவுக்கு பயன்படுகிறது என்பதை எந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.


மியூசிக் தெரபி குறித்து விரிவாக பேசியுள்ள டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆராய்ச்சியாளரும் மருத்துவருமான தீப்தி விபா, "மூளை பக்கவாதத்திற்குப் பிறகு கேட்கும் மற்றும் பேசும் திறனை இழந்த நோயாளிகளுக்கு இசையின் மூலம் ஹம்மிங் மற்றும் பேசுவதைக் கற்றுக்கொடுக்க போகிறோம்.


இந்தியாவிலேயே முதன்முறையாக, அஃபாசியா கோளாறால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக இசையின் மூலம் சிகிச்சை அளிக்க ஆராய்ச்சி செய்து வருகிறோம். இந்த விவகாரத்தில், எய்ம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் துறை டெல்லி ஐஐடியின் உதவியை நாடி வருகிறது" என்றார்.


அஃபாசியா கோளாறு என்றால் என்ன?


மூளை பக்கவாதத்திற்குப் பிறகு, சுமார் 21 முதல் 38 சதவிகித நோயாளிகள் அஃபாசியாவால் பாதிக்கப்படுகின்றனர். அஃபாசியா நோயால் நோயாளியின் மூளையின் இடது பகுதி வேலை செய்யாமல் போய்விடுகிறது. மூளையின் இடது பகுதியால்தான் ஒருவர் பேசுகிறார். விஷயங்களைப் புரிந்துகொள்கிறார். மக்கள் முன் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்.


அஃபாசியா கோளாறால் பாதிக்கப்பட்டவர், ஒரு சிறிய வார்த்தை கூட பேச முடியாது. இந்த பிரச்சனையில் இருந்து விடுபட, அஃபாசியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எய்ம்ஸ் நரம்பியல் துறை  இசை மூலம் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. வெளிநாடுகளில் இத்தகைய நோயாளிகளுக்கு இசை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


நோயாளிகளை குணப்படுத்துகிறதா மியூசிக் தெரபி?


மியூசிக் தெரபி எப்படி அளிக்கப்படுகிறது என்பது குறித்து விவரித்துள்ள ஆராய்ச்சியாளர் தீப்தி விபா, "அஃபாசியா கோளாறால் நோயாளியின் மூளையின் இடது பகுதி வேலை செய்யாது. ஆனால் வலது பகுதி முற்றிலும் ஆரோக்கியமாக இருக்கும். 


இதன் காரணமாக இசையைப் புரிந்துகொள்வது மட்டுமல்லாமல், அதன் ட்யூனையும் முழுவதுமாக நோயாளியால் முணுமுணுக்க வைக்க முடியும். அஃபாசியாவால் பாதிக்கப்பட்டவர், "தண்ணீர்" என்ற வார்த்தயை கூட சொல்ல முடியாது. ஆனால், இசை மூலமான சிகிச்சை மூலம் முழு பாடலையும் முணுமுணுக்க செய்ய முடியும்" என்றார்.