காங்கிரஸ் கட்சியை மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.
12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி செல்லும் ஒற்றுமை பயணத்தில் அரசியல் பொதுக்குழு கூட்டங்கள் எதையும் நடத்தப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. 60 நாட்களைக் கடந்துள்ள இந்த பயணம், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரம், தெலுங்கானா மகாராஷ்டிரா வழியாக தற்போது ராஜஸ்தானில் பயணித்துக் கொண்டிருக்கிறது.
இதில், பலத்தரப்பட்ட மக்களிடம் உரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார் ராகுல் காந்தி. தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நடைபயணம் கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை கடந்து தற்போது ஹரியானாவை எட்டி உள்ளது.
இந்நிலையில் இன்று பாரத் ஜோடா யாத்திரையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துக் கொண்டார். ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் நிலையில் ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த பேரணியில் கலந்துக் கொண்டார்..
ராகுல் காந்தி முன்னெடுத்திருக்கும் இந்திய தேசிய ஒற்றுமை யாத்திரையில் (பாரத் ஜடோ யாத்ரா) மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளார்.
புது டெல்லியில் வரும் 24- ஆம் தேதி நடைபெறும் யாத்திரையில் கமல்ஹாசன் பங்கேற உள்ளதாக அக்கட்சியின் உறுப்பினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் தி.மு.க. -வின் செயல்பாடுகளை பெரிதாக விமர்சிக்காமல் இருக்கும் மக்கள் நீதி மய்யம், ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் கட்சி தலைவர் பங்கேற்க இருப்பது கூட்டணி முடிவாக இருக்கக் கூடுமோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மக்கள் நீதி மய்யம் எந்த கட்சியோடும் கூட்டணி இல்லை என்ற முடிவிலேயே இருக்கிறது. மாற்றத்திற்காக செயல்படுகிறோம் என்று சொல்லும் கட்சி கடந்த தேர்தலின்போதும் தனித்து நின்றது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சி திராவிட முன்னேற்ற கழகத்துடன் கூட்டணியில் உள்ளது. தற்போது ராகுல் உடன் ஒற்றுமைப் பயணத்தில் பங்கேற்பது புதிய கூட்டணிக்கான தொடக்கமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு தயாராகும் விதமாக மக்கள் நீதி மய்யம் கட்சி தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.