உலகம் முழுவதும் ஒவ்வொரு நூற்றாண்டிலும் மக்களை நடுங்க வைக்கும் சைக்கோ கொலைக்காரர்கள் இருந்து வந்தனர். அந்த பட்டியலில் மக்களை நடுங்க வைத்த கொலைக்காரர்களில் வெகு சிலர் மட்டுமே தற்போது உயிருடன் உள்ளனர். இப்போது இணையத்தில் பலராலும் தேடப்பட்டு வரும் பெயர் சோப்ராஜ். சிகப்பு ரோஜாக்கள் படத்தில் வரும் கமல்ஹாசனைப் போல தொப்பி அணிந்த மாடர்ன்  சீரியல் கில்லரான இவர் நேற்றுதான் நேபாள நாட்டு சிறையில் இருந்து விடுதலையானார்.


சோப்ராஜ் விடுதலை:


இந்திய தந்தைக்கும் – வியட்நாம் தாய்க்கும் பிறந்த பிரெஞ்ச் குடிமகன்தான் சார்ல்ஸ் சோப்ராஜ். 1944ம் ஆண்டு ஏப்ரல் 6-ந் தேதி பிறந்த இவரது முழுப்பெயர் சார்லஸ் குருமுக் சோப்ராஜ் ஹோச்சந்த் பாவ்னானி. சோப்ராஜ் பிறந்த பிறகு அவரது தந்தை பிரிந்து சென்ற பிறகு அவரது தாய் பிரெஞ்ச் ராணுவத்தின் லெப்டினன்டை திருமணம் செய்து கொண்டு பிரான்சில் குடியேறினார்.


சிறுவயது முதலே சிறு, சிறு குற்றச்செயல்களில் சோப்ராஜ் ஈடுபட்டு வந்தார்.  முதன்முறையாக அவர் 1963ம் ஆண்டு திருட்டு வழக்கு ஒன்றிற்காக பாரீஸ் சிறைக்குச் சென்றார். எதிரில் உள்ள நபரை பேசி மயக்குவதில் வல்லவரான சோப்ராஜ் தனது சிறைக்குள் மட்டுமே புத்தகங்களை வைத்திருப்பதற்கு அதிகாரிகளிடம் அனுமதியும் பெற்று, பல சலுகைகளை பெற்றார். அங்கே அவருக்கு பெலிக்ஸ் என்ற பணக்கார இளைஞருடன் நட்பு கிட்டியது.


பிகினி கில்லர்:


சினிமா பாணியில் காதல், திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சோப்ராஜ் பல்வேறு நாடுகளுக்கு செல்லத் தொடங்கினார். ஆடம்பர வாழ்க்கையின்மீது மோகம் கொண்டிருந்த சோப்ராஜ் முதன்முதலில் தாய்லாந்து நாட்டின் டைடல் நீச்சல்குளத்தில் அமெரிக்காவின் சியாட்டில் நகரில் இருந்து வந்த தெரசா நோவ்ல்டன் என்ற பெண்ணை முதன்முதலாக கொலை செய்தார். அந்த நீச்சல் குளத்தில் தெரசா நீச்சல் உடையான பிகினியில் சடலமாக மீட்கப்பட்டார். அதுதான் சோப்ராஜ் பிகினி கில்லராக மாறியதற்கான முதல் கொலை ஆகும். அடுத்து துருக்கியில் இருந்து வந்த இளம்பெண் செபர்டிக் கொல்லப்பட்டார்.


கொல்லப்பட்டவர்களிடம் இருந்து நகைகள், பணங்களை கொள்ளையடிக்கத் தொடங்கிய சோப்ராஜிற்கு கொலைகள் செய்வதே முக்கிய நோக்கமாக மாறியது. அடுத்தடுத்து கொலைகளை அரங்கேற்றி வந்தவர் தாய்லாந்து நாட்டிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளையும், குறிப்பாக பெண்களையும் குறிவைத்தே கொலை செய்து வந்தார். கொல்லப்பட்ட ஆண்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பாஸ்போர்ட்களை பயன்படுத்தி அவர்களை போலவே கெட்டப்களை மாற்றிக்கொண்டு வேறு நாட்டுக்கு தப்பிச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.


சிறைவாசம்:


 இவ்வாறு இவர் பாம்பு தனது தோலை உரித்துக்கொள்வது போல சோப்ராஜ் கெட்டப்புகளை மாற்றிக்கொண்டு செல்வதால் அவரை செர்பெண்ட் என்று ஆங்கிலத்தில் அழைக்கத் தொடங்கினர். பல நாடுகளில் தனது கொடூர கொலையை அரங்கேற்றிய சோப்ராஜ் இந்தியாவிலும் தனது ஆட்டத்தை அரங்கேற்றியுள்ளார். இந்தியாவில் நடைபெற்ற ஒரு மரண வழக்கில் சிக்கிய சோப்ராஜ் இந்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சோப்ராஜ் 1997ம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.


நேபாளத்தில் 1975ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி கோனி ஜோ ப்ரோன்சிஸ் என்பவரை கொலை செய்ததற்காக 2003ம் ஆண்டு நேபாளத்தில் சோப்ராஜ் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சோப்ராஜூக்கு அந்த நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. நேபாளத்தில் ஆயுள் தண்டனை 20 ஆண்டு காலம் வழங்கப்படுகிறது. சோப்ராஜ் இதுவரை சுமார் 20க்கும் மேற்பட்ட பெண்களை கொலை செய்துள்ளார்.


செர்பென்ட்:


சைக்கோ சீரியல் கில்லரான சோப்ராஜ் நேபாள சிறையில் நன்னடத்தை முறையில் நடந்து கொண்டதாலும், அவரது சிறைத்தண்டனை நீட்டித்து வைப்பதற்கு வேறு காரணங்கள் இல்லை என்பதற்காகவும் அவரை விடுதலை செய்து குடிமையியல் அதிகாரிகளிடம் ஒப்படைக்க அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது குடிமைப்பணி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவதற்காக மட்டுமே அவர் இன்னும் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உலகையே நடுங்கவைத்த சோப்ராஜ் விடுதலை ஆகியிருப்பது பொதுமக்கள் மத்தியில் மீண்டும் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


தற்போது 78 வயதாகும் சோப்ராஜ் பல நாடுகளில் செய்த கொடூர கொலைகளை அடிப்படையாக கொண்டு அவரது வாழ்க்கைச் சம்பவங்களை தழுவி செர்பென்ட் என்ற வெப்சீரிஸ் நெட்ப்ளிக்சில் வெளியாகியுள்ளது. மேலும் செர்பென்ட் என்ற பெயரில் இவரது வாழ்க்கை சம்பவங்கள் புத்தகமாகவும் வெளிவந்துள்ளது.