கட்சி தொடங்கியதில் இருந், இரு பெரும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல் உள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் முதல்முறையாக திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.


ஊழலை எதிர்த்து அரசியல் களம் கண்ட கமல், திராவிட கட்சிகளையும், பாஜகவையும் தொடர்ந்து விமர்சித்து வந்தார். ஆனால், சமீககாலமாக, அதில் மாற்றம் தெரிகிறது. அதன் விளைவாகதான், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு கமல் ஆதரவு தெரிவித்துள்ளார்.


ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் கலந்து கொண்டதுதான் திமுக கூட்டணியை நோக்கி கமல் மேற்கொண்ட முதல் அரசியல் நகர்வாகும். அப்போது பேசிய கமல், ராகுல் காந்தி நடைபயணத்தில் ஒரு இந்தியனாக கலந்து கொண்டதாக விளக்கம் அளித்தார். 


மேலும், தனது தந்தை ஒரு காங்கிரஸ்காரர் என அவர் தெரிவித்தது பலரது புருவங்களை உயர்த்தியது. அதன் தொடர்ச்சியாக, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கமலை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டார்.


இதையடுத்து, கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசித்துவிட்டு முடிவை அறிவிப்பதாக கூறிய கமல், இரண்டாவதே நாளே தனது ஆதரவை திமுக கூட்டணிக்கு வழங்கினார். இதில், கவனிக்க வேண்டியது என்னவென்றால் ஆதரவு தெரிவித்துவிட்டு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கமல் அளித்த பதில்தான்.


காங்கிரஸ் கட்சியிடம் எம்பி சீட்டை கமல் எதிர்பார்க்கிறாரா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ஏன் அப்படி இருக்கக் கூடாது என பதில் அளித்தது அனைத்து விதமான வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்தது. 


இந்த கூட்டணி 2024ஆம் ஆண்டு தொடருமா என்ற கேள்விக்கு பதில் அளித்த கமல், "இந்த ஒரு முடிவுதான் எடுக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கானது. 2024 பொதுத்தேர்தலைப் பற்றிச் சொல்ல இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. நான் இதை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தருணம் என்று அழைக்கிறேன்.


தேசிய முக்கியத்துவம் என்று வரும்போது கட்சி சித்தாந்தத்தை கடக்க வேண்டும். மக்கள் அதில் முதன்மையானவர்கள். அனைவரையும் ஒற்றைக் கலாச்சாரத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாங்கள் எதிரானவர்கள். இந்தியாவின் பன்முகத்தன்மை அதை தனித்துவமாக்குகிறது என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்" என்றார்.


தொடர்ந்து பேசிய அவர், "இது பெரிய காரணத்திற்கு எதிரான போர். இதில் நான் சிறிய வேறுபாடுகளை தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன். மீண்டும் போருக்கு வருவோம். ஊழலுக்கு எதிராக குரல் எழுப்ப மாட்டேன் என்று அர்த்தம் இல்லை" என்றார்.


இடைத்தேர்தலுக்கு அளிக்கப்பட்ட ஆதரவு, 2024 மக்களவை தேர்தலுக்கும் பொருந்தும் என்றே அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, வரும் மக்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொகுதியில் கமல் களம் இறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


அல்லது கமலுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.