Uttar Pradesh : உத்தர பிரதேசத்தில் பாரத மாத சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற பட்டியலின மாணவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் பகுதியைச் சேர்ந்த அர்ஜூன் ராணா என்ற பட்டியலின மாணவர் அங்குள்ள கல்லூரியில் ஒன்றில் படித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் ஷாஜகான்பூரில் உள்ள பாரத மாதா சிலைக்கு ஷூ அணிந்து கொண்டு மாலை அணிவிக்க சென்றார். அப்போது இதனை பார்த்த மற்ற மாணவர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி அர்ஜூன் ராணா கல்லூரி வளாகத்தில் தனியாக நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மாணவர்கள் பாரத மாதா சிலைக்கு மாலை அணிவிக்க சென்றதற்காக அவரை சரமாரியாக தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலத்த காயமடைந்த அந்த மாணவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், ” பாரத மாதா சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற ஆத்திரத்தில் தலித் மாணவர் அர்ஜூன் ராணா மீது கடும் கோபத்தில் இருந்துள்ளனர். அதனால் தனியாக கல்லூரி வளாகத்தில் நின்று கொண்டிருந்த அர்ஜூன் ராணாவை, ஷாபாஸ் மற்றும் சூர்யன்ஷ் தலைமையிலான அணிகள் 20 பேர் சேர்ந்த அந்த மாணவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த அந்த மாணவருக்கு சிக்ச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளதாக” தெரிவித்தனர்.
மற்றொரு சம்பவம்
இதே போன்று, பல மாநிலங்களில் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கப்பட்டு வந்தனர். அந்தவகையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு அம்ருதஹள்ளி பகுதியில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் ஒன்று உள்ளது. அங்கு பட்டியலின சமூகத்தை சேர்ந்த ஒரு பெண் சென்றுள்ளார். கோயிலில் அப்போது கூட்டம் அதிகம் இல்லாத நேரம். அந்த நேரத்தில் கோயிலுக்குள் நுழைந்த அந்த பெண்ணிடம் கோயில் நிர்வாகி ஏதோ பேசியிருக்கிறார்.
பின்னர், அங்கிருந்த அந்த பெண்ணை கோயில் நிர்வாகி வெளியே போக சொல்லியதாக தெரிகிறது. கோயிலில் இருந்து வெளியே செல்ல மறுத்த அந்த பெண்ணின் கையை பிடித்து வெளியே இழுத்து வர முயன்றள்ளார். அதற்கு அந்த பெண், "நான் சாமி கும்பிடதானே வந்தேன்? நான் ஏன் வெளியே செல்ல வேண்டும்? நான் சாமி கும்பிட்டு தான் செல்வேன்” என கூறியிருக்கிறார். அந்த பெண் கோயிலில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் அவரை கட்டையால் அடித்து தரதரவென இழுத்து வெளியே தள்ளியுள்ளார். பின்னர், இது குறித்து கோயில் நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.