தி வால்ட் டிஸ்னி நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக (அரசு விவகாரங்கள்) இருந்த கே. ஆராவமுதன், வியாகாம்18 நிறுவனத்தில் இணைந்துள்ளார். பொது கொள்கை (public policy portfolio) பிரிவின் தலைவர் பதவி அவருக்கு வழங்கப்பட உள்ளது. 


இந்திய ஒளிபரப்புத் துறையில் நிபுணரான ஆராவமுதன்:


டிஸ்னி ஸ்டாரின் பிராந்திய சேனல்களிலும் விளையாட்டு ஒளிபரப்பு சேனலான ஸ்டார் ஸ்போர்ட்ஸ், திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகம் (ஸ்டார் ஸ்டுடியோஸ்) மற்றும் ஓடிடி (டிஸ்னி+ஹாட்ஸ்டார்) ஆகியவற்றின் அரசு ஒழுங்குமுறை விவகாரங்களிலும் தொழில் உறவுகளையும் ஆராவமுதன் கவனித்து வந்தார். 


கடந்த 2007 ஆம் ஆண்டு, ஸ்டார் இந்தியாவில் கார்ப்பரேட் கம்யூனிகேஷன் மேலாளராக ஆராவமுதன் சேர்ந்தார். ஆனால், பின்னர் 2008இல் ஒழுங்குமுறை பிரிவுக்கு அவர் மாறினார். கடந்த 1989 முதல் 1993 வரையில், அவர் அரசாங்கத்துடன் சிறிது காலம் பணியாற்றினார். பின்னர், தனியார் துறையில் கால் பதித்த அவர் மிகவும் சவாலான பாத்திரங்களை ஏற்று பணியாற்று வருகிறார்.


கடந்த வந்த பாதை:


ஸ்டார் நிறுவனத்தில் சேருவதற்கு முன், அவர் ஹிந்துஸ்தான் டைம்ஸ், SAB TV, UTV மற்றும் ITV (செய்தி மற்றும் நடப்பு நிகழ்ச்சிகளை தயாரித்தல்) மற்றும் ஸ்டார் நியூஸ் (MCCS) ஆகியவற்றில் பணியாற்றினார். ஸ்டார் இந்தியா நிறுவனத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்வதில் ஆராவமுதன் முக்கியப் பங்காற்றினார்.


ஸ்டார் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும்போது, அரசியல் கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள், கட்டுப்பாட்டாளர்கள், தொழில்துறையில் அனுபவம் படைத்தவர்கள், செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் போன்ற பல்வேறு அரசாங்க பங்குதாரர்களுடன் இணைந்து கொள்கை வடிவமைப்பில் முக்கிய பங்காற்றினார்.


இந்திய ஒளிபரப்புத் துறை, உச்சக்கட்ட பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. அந்த வளர்ச்சியை அருகில் இருந்து கண்ட ஒளிபரப்புத் துறையை சேர்ந்த ஒரு சில நிர்வாகிகளில் ஆரவமுதனும் ஒன்று. மத்திய அரசுக்கு சொந்தமான தூர்தர்ஷன் சேனல்களில் தயாரிப்பு பணிகளை தனியாரிடம் வழங்கியதில் இருந்து தற்போது அந்த துறை உச்சபட்சமாக வளர்ந்து 900 சேனல்களுடன் இயங்கி வருகிறது.


ஒளிபரப்புத் துறையின் ஆரம்ப கட்ட வளர்ச்சியில் இருந்து தற்போது அதன் உச்சக்கட்ட வளர்ச்சி வரையில், அதனுடன் இணைந்து வளர்ச்சி கண்டவர் ஆராவமுதன். இந்திய அரசாங்கத்தின் கொள்கை மற்றும் ஒழுங்குமுறை திட்டங்களை வகுப்பதில் ஸ்டார் இந்தியா சார்பில் தீவிர பங்கேற்பாளராக இருந்துள்ளார்.


இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI), இந்திய தொழில் கூட்டமைப்பு (CII), அமெரிக்க-இந்தியா வணிக கவுன்சில் (USIBC), யுஎஸ்-இந்தியா வியூகக் கூட்டாண்மை மன்றம் (USISPF), இன்டர்நெட் மற்றும் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (IAMAI), இந்திய ஒலிபரப்பு மற்றும் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் (IBDF) உள்ளிட்ட தொழில்துறை அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.


வியாகாம்18 நிறுவனத்தில் இணைய உள்ள ஆராவமுதனுக்கு ஒளிபரப்புத்துறை நிபுணர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.