ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் இந்தாண்டின் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுகிறது. இதை தொடர்ந்து, அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக கருத்தப்படும் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி பெற பாஜக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 


தெலங்கானாவில் முக்கிய ஆலோசனை கூட்டம்:


அந்த வகையில், தேர்தலுக்கான கள பணிகளை தொடங்கியுள்ள பாஜக, எந்த மாநிலத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து வியூகம் அமைத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தேர்தல் நடைபெற உள்ள தெலங்கானா உள்பட நான்கு மாநிலங்களுக்கு புதிய மாநில தலைவர்களை நியமித்தது. 


இதனை தொடர்ந்து, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மாநிலங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில், ஹைதராபாத்தில் பாஜகவின் தேர்தல் வியூக கூட்டம் இன்று நடைபெற்றது. பல்வேறு வளர்ச்சி பணி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தெலங்கானாவுக்கு நேற்று பிரதமர் மோடி வந்து சென்ற சூழலில், தேர்தல் வியூக கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் 11 மாநில தலைவர்கள் கலந்து கொண்டனர். சமீபத்தில், கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததை தொடர்ந்து, கட்சியில் உள்ள வேறுபாடுகளை அடையாளம் கண்டு, வரவிருக்கும் தேர்தலில் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.


மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள்:


தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சியில் நிலவி வரும் உட்கட்சி பூசலை தீர்க்கும் வகையில்தான் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை மாநில தலைவராக கட்சி மேலிடம் நியமித்தது. தெலங்கானா தேர்தலில் வெற்றி பெற்று அங்கு பாஜக ஆட்சி அமைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் மாநில தலைவர் பதவி கிஷன் ரெட்டியிடம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.


தேர்தலுக்கு முன்னதாக கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. மத்திய அமைச்சரவையில் யாருக்கு இடம் கொடுப்பது என்பது தொடர்பான ஆலோசனை கடந்த மாதங்களாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.


கடந்த சில நாட்களாக பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, பல்வேறு அமைச்சர்கள் மற்றும் கட்சித் தலைவர்களுக்கு இடையேயான சந்திப்புகளைத் தொடர்ந்து, மத்திய அமைச்சரவை மாற்றம் தொடர்பான ஊகம் தீவிரமடைந்தன. குறைந்தபட்சம் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக, எந்த நாளிலும் மாற்றங்கள் அறிவிக்கப்படலாம் என்று பாஜக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.