ஆந்திராவில் அமைந்துள்ளது குண்டூர். இங்கு மிளகாய் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் புதிய அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. 






குண்டூரில் நடைபெற்ற இந்திய மிளகாய் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் புதிய அலுவலக திறப்பு விழாவிற்கு பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினர் ஜி.வி.எல். நரசிம்ம ராவ் சென்றார். அப்போது, அங்கு கோமாதா பூஜை நடத்தப்பட்டது. அந்த சமயத்தில், பசு மாட்டினை தொட்டு வழிபட நரசிம்ம ராவ் முயற்சி செய்தார். ஆனால், அந்த மாடு அவரை எட்டி உதைத்தது. இருப்பினும், இரண்டாவது முறையாக அவர் தொட்டு வழிபட முயற்சி செய்தார். திரும்பவும் அந்த மாடு அவரை உதைத்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


வட இந்தியா:


வட இந்தியாவில் மாட்டின் பெயரில் நடக்கும் அரசியல் பெரிய சர்ச்சையை கிளப்பி வருகிறது. மாட்டினை உணவாக உண்ணும் மக்கள் பெருவாரியாக இருக்கும் இந்த நாட்டில், அதை உண்பதற்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


12 மில்லியனுக்கும் அதிகமான இந்துக்கள் உள்பட சுமார் 80 மில்லியன் இந்தியர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள் என அரசு வெளியிட்ட தரவை மேற்கோள் காட்டி தனியார் ஆங்கில செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.


நாட்டின் 20 மாநிலங்களில் மாட்டிறைச்சியை விற்பதை கட்டுப்படுத்தும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மாட்டிறைச்சியை கட்டுப்படுத்தும் விதமாக இயற்றப்பட்ட மாநில சட்டங்கள் செல்லும் என உச்ச நீதிமன்றம் 2005ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.


தாக்குதல் சம்பவங்கள்:


இச்சூழலில், 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, மாட்டிறைச்சியை விற்பதாகக் கூறி, இஸ்லாமியர்கள் மீதும் தலித்துகள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்தது. அதன் உச்சக்கட்டமாக, 2015ஆம் ஆண்டு, உத்தர பிரதேச மாநிலம் தாத்ரியில் 52 வயது அக்லாக் என்ற இஸ்லாமியர் மாட்டிறைச்சியை கடத்தியதாகக் கூறி கும்பல் ஒன்று தாக்கியது.


அவரின் வீட்டிற்கே சென்ற, கடுமையாக தாக்கிய அந்த கும்பல் அவரை படுகொலை செய்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்தும் பல்வேறு மாநிலங்களில் இம்மாதிரியான சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. 


 


இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கடவுள் என்ற பெயரில் ஒருவரின் அடிப்படை உரிமைகளில் தலையிடுவது பெரிய பிரச்னையை கிளப்பி வருகிறது.