கடந்த 2021ம் ஆண்டு நடிகர் சைஃப் அலி கான், கிருத்திகா கம்ரா, சுக்மணி சாதனா ஆகியோரின் நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியான தாண்டவ் வெப் சீரிஸ் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பிரதமரை தவறாக சித்தரித்தாக புகார்:
அதில், உத்தர பிரதேச காவல்துறை அதிகாரிகள், இந்து கடவுள்கள், பிரதமர் கதாபாத்திரத்தை தவறாக சித்தரித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, கிரேட்டர் நொய்டாவின் ரபுபுரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட ரௌனிஜா கிராமத்தைச் சேர்ந்த பல்பீர் ஆசாத், வெப் சீரிஸ் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இதற்கு மத்தியில், அமேசான் பிரைம் இந்திய தலைவர் அபர்ணா புரோஹித், வெப் சீரிஸ் இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர், தயாரிப்பாளர் ஹிமான்ஷு மெஹ்ரா; திரைக்கதை எழுத்தாளர் கௌரவ் சோலங்கி, நடிகர் முகமது ஜீஷன் அய்யூப் ஆகியோர் முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
ஆனால், அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. வெப் சீரிஸ் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் அவர்கள் ஜாமீன் கோரலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
முன்ஜாமீன்:
பின்னர், முன்ஜாமீன் கோரி அபர்ணா அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், உயர் நீதிமன்றமும் முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
இதனை தொடர்ந்து, தனக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அபர்ணா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
"அபர்ணா விழிப்புடன் இருக்கவில்லை. பெரும்பான்மையான குடிமக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான திரைப்படத்தை ஒளிபரப்ப அனுமதிப்பதில் கிரிமினல் வழக்கு தொடரும் வகையில் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டுள்ளார்" எனக் கூறி, முன்ஜாமீன் வழங்க மறுத்தது.
இருப்பினும், கைது செய்ய இடைக்கால தடை விதிக்கக் கோரி அவர் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை ஏற்று கொண்ட நீதிமன்றம், அவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு:
இச்சூழலில், அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எம்.எம்.சுந்திரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு, விசாரணைக்கு புரோகித் ஒத்துழைத்து வருவதைக் குறிப்பிட்டு முன்ஜாமீன் வழங்கியது.
மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி மற்றும் சித்தார்த் லுத்ரா ஆகியோர், விசாரணைக்கு புரோகித் ஒத்துழைப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.