நீதிபதிகளின் நியமன முறையில் நீதித்துறை மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறது என்ற தவறான கருத்து பரப்பப்பட்டு வருவதாக இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார். இந்திய- நீதித்துறையின் எதிர்கால சவால்கள் என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.  


சமீப நாட்களில், நீதிபதிகளை நீதிபதிகளே தேர்வு செய்கின்றனர் என்ற முழக்கமிடுவது பெருவழக்கமாக உள்ளது. ஆனால், இது மிகவும் கட்டமைக்கப்பட்ட கட்டுக்கதை.  இத்தகையை கதையாடலை அவர்களின் குறுகிய நோக்கங்களுக்கு பயன்படுவதால், நியமன முறையைப் பற்றி நன்குணர்ந்த சிலர் கூட அதனை ஊக்கமளித்து வருகின்றனர். 


நீதிபதிகளின் நியமனத்தில் நீதித்துறை ஒரு அங்கமே.  அரசின் மற்ற அங்கங்களான, குடியரசுத் தலைவர், மத்திய சட்ட அமைச்சகம், மாநில அரசு, மாநில ஆளுநர், உயர்நீதிமன்ற கொலிஜியம், உளவுத்துறை பிரிவு, ஆகியவையும் நியமன முறையில் பங்கு வகிக்கின்றன" என்று தெரிவித்தார். 


அதிகார வரம்பு: 


நீதித்துறை தனது லட்சுமண ரேகையை தாண்டி நிர்வாகத்தில் அத்துமீறக் கூடாது என்ற வாதம் 'நீதிமுறை மேலாய்வு' கட்டுபடுத்தும் ஒரே நோக்கில் தான் எழுப்பப்படுகிறது. அதேபோன்று, நீதித்துறையின்அதீத செயல்பாடு (Judicial Overreach)  என்பதும் புனையப்பட்ட கற்பனை. அரசியலமைப்பை விட உயர்ந்தது எதுவும் இல்லை. அரசின் 3 அங்கங்களான பேரவை , நிர்வாகம், நீதித்துறை ஆகியவை அரசியலமைப்புக்கு உட்பட்டு செயல் பட வேண்டும் என்பதால், சட்ட அமைப்புகளை மேலாய்வுக்கு உட்படுத்தும் பொறுப்பு நீதித்துறைக்கு உண்டு என்றும் தெரிவித்தார்.   


 






 


ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீதான அடிப்படை நம்பிக்கையைக் கொண்டு வர, அரசு நிர்வாகம் நீதித்துறையோடு இணக்கத்துடனும், பரஸ்பர மரியாதையுடனும் செயல்பட வேண்டும். ஆனால், தற்போது நீதிமன்ற உத்தரவுகளை அவமதிக்கும் போக்கு அதிகம் காணப்படுகிறது" என்றும் தெரிவித்தார்.        


அரசு நிர்வாகம் தனது நியாயமற்ற நடவடிக்கைகளை, பெரும்பான்மை சமூகம் உருவாக்கியுள்ள கருத்தியலை மட்டும் கொண்டு  நியாயப்படுத்தமுடியாது. அனைத்து நடவடிக்கைகளும் அரசியலமைப்புக்கு உட்பட்டது என்றம் தெரிவித்தார்.            


நீதிபதிகள் நியமனம்:  


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 124-வது பிரிவில், உச்ச நீதிமன்ற நீதிபதி ஒவ்வொருவரையும், உச்ச நீதிமன்றத்திலும் மாநிலங்களிலுள்ள நீதிமன்றங்களிலுமுள்ள நீதிபதிகளில் யாரை ஒருவர் கலந்தாய்வு செய்வது அவசியமெனக்  குடியரசுத்தலைவர் கருதுகின்றாரோ அந்நீதிபதிகளுடன் கலந்தாய்வு செய்த பின்பு தன் கையொப்பமும் முத்திரையும் கொண்ட அதிகார ஆணையினால் குடியரசுத்தலைவர் அமர்த்துவார்


தலைமை நீதிபதி அல்லாத பிற நீதிபதியின் நியமனம் இந்தியத் தலைமை நீதிபதியுடன் தவறாது கலந்தாய்வு செய்யப்படுதல் வேண்டும்" என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.   


அதாவது, இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகளை இந்திய குடியரசுத் தலைவர் நியமிப்பார். ஆனால், அவ்வாறு நியமிக்கின்ற போது, நீதிபதிகள் தேர்வுக் குழுவின் (கொலிஜியம்) சிபாரிசுக்கு இணங்கவே குடியரசுத் தலைவர் செயற்பட வேண்டும். உச்சநீதிமன்ற தேர்வுக்குழு பரிந்துரைக்கும் யாரையாவது அரசு ஏற்கவில்லை எனில், அதற்குப் போதிய காரணங்களைத் தெரிவித்தாக வேண்டும். இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம்தான் உள்ளது என  Second Judges Case (1993) வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.