ஆந்திராவின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் என்.டி.ஆரின் பெயரில் இயங்கி வரும் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றி, தனது தந்தை பெயரை வைக்க முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்துள்ள நிலையில், அவரது முடிவுக்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி தனது தந்தையும் மறைந்த முதலமைச்சருமான டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் பெயரை சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு சூட்டி மாற்றியமைக்க முடிவு செய்துள்ளார். அவரது இந்த முடிவு ஆந்திர மாநிலத்தில் சர்ச்சையைக் கிளப்பி பேசுபொருள் ஆகியுள்ளது.
இந்நிலையில், அரசின் இந்த செயல் ஒய்எஸ்ஆரின் இமேஜை உயர்த்தவில்லை என்றும், தெலுங்கு மக்களின் மனதில் இருந்து என்டிஆர் நினைவை யாராலும் அழிக்க முடியாது என்றும் என்.டி.ராமராவின் பேரனும் நடிகருமான ஜூனியர் என் டிஆர் தெரிவித்துள்ளார்.
“ஒருவருடைய பெயரை எடுத்துவிட்டு மற்றொருவரின் பெயரைச் சூட்டுவதால் ஒய்எஸ்ஆரின் அந்தஸ்து உயராது. என்டிஆரின் அந்தஸ்தையும் அது குறைக்காது.
சுகாதாரப் பல்கலைக்கழகத்தில் இருந்து என்டிஆர் பெயரை பெயரை நீக்கியதன் மூலம், அவர் சம்பாதித்த புகழையோ, தெலுங்கு தேச வரலாற்றில் அவருக்கு இருந்த இடத்தையோ, தெலுங்கு மக்களின் இதயங்களில் உள்ள அவரது நினைவுகளையோ யாராலும் அழிக்க முடியாது” என ட்வீட் செய்துள்ளார்.
பொதுவாக அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து விலகி இருக்கும் ஜூனியர் என்.டி.ஆர் இச்சம்பவம் குறித்து இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது.
ஜூனியர் என்டிஆர் தற்போது கொரட்டாலா சிவா இயக்கத்தில் பெயரிடப்படாத திரைப்படம் ஒன்றில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.