சமூக வலைதளங்களில் எப்போதும் விபத்து தொடர்பான வீடியோக்கள் வேகமாக வைரலாவது வழக்கம். அந்தவகையில் தற்போது ஒரு வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சாலையில் சண்டையிட்டு கொண்ட நபர்கள் மீது கார் மோதும் காட்சி இடம்பெற்றுள்ளது. அத்துடன் அந்த கார் மோதிய பின்பும் அவர்கள் எழுந்து சண்டையை தொடர்வது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் காசியாபாத் பகுதியில் நேற்று (21.09.2022) ஒரு சாலை விபத்து ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காசியபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன்படி நேற்று காசியாபாத்தின் மசூரி பகுதியில் இரண்டு பிரிவு கல்லூரி மாணவர்கள் இடையே சண்டை நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் அந்தச் சண்டையில் மாணவர்கள் சிலர் சாலையில் சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது சாலையில் வேகமாக வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதியுள்ளதாக தெரிகிறது. எனினும் அதன்பின்னரும் அவர்கள் சண்டையை தொடர்ந்துள்ளதனர். இந்தச் சம்பவம் தொடர்பான காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது.
அந்தக் காட்சிகளை அடிப்படையாக வைத்து காவல்துறையினர் ஒருசிலரை கைது செய்துள்ளனர். மேலும் வேகமாக இயக்கப்பட்ட அந்தக் காரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக காசியபாத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராணி ராஜ் ஐபிஎஸ் தகவல் தெரிவித்துள்ளார். அதில் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் எடுத்த நடவடிக்கை தொடர்பாக விவரிக்கிறார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பலரும் தங்களுடைய வியப்பை பதிவு செய்து வருகின்றனர். மேலும் சிலர் இந்தச் சண்டையில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் காரை வேகமாக இயக்கிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.