இளையராஜாவை அவமானப்படுத்துவதா என பாஜக தலைவர் ஜே.பி நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைபடுவார் என இசைஞானி இளையராஜா எழுதியதாக கூறப்படும் வரிகளுக்கு ஆதரவும், தற்போது கடும் எதிர்ப்பும் கிளப்பி வருகிறது.
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் பாஜக தலைவர் ஜெ.பி நட்டா, அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், "ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர்கள், ஒரு வாய்ப்பையும் தவறவிடாமல், நாட்டின் மிக உயர்ந்த இசைக்கலைஞரான இளையராஜாவை அவமானப்படுத்திவருகிறார்கள். தாங்கள் சார்ந்த கட்சி விரும்பாத கருத்தைக் கூறிய ஒரே காரணத்திற்காக அவரை அவமானப்படுத்துவதா? இது ஜனநாயகமா? வெவ்வேறு கருத்துக்கள் இருந்தாலும், இணைந்து வாழமுடியும் என்பதே ஜனநாயகம்" என தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாள்ர்களை சந்தித்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு, "இளையராஜாவின் கருத்தை இடதுசாரிகள், எதிர்க்கட்சிகளால் ஏன் ஏற்க முடியவில்லை. கருத்து சுதந்திரம் பற்றி பேசுபவர்கள்தான் இளையராஜாவின் கருத்தை எதிர்கின்றனர்” என தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக, இதுதொடர்பாக இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் கருத்து கூறியுள்ளார். இதுதொடர்பாக கங்கை அமரன் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில், “அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்கமுடியாது என இளையராஜா கூறினார். தனக்கு எதிரான விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதாகவும் என்னிடம் இளையராஜா கூறினார். மற்றவர்கள் எப்படி கருத்து கூறுகிறார்களோ அதேபோல்தான் கருத்தைக் கூறினேன் என்றார். தான் பதவி வாங்குவதற்காக மோடியை புகழவில்லை. தான் காட்சிக்காரர் இல்லை என்றும் கூறினார். அம்பேத்கரையும் பிடிக்கும், மோடியையும் பிடிக்கும். அதனால் ஒப்பிட்டு பேசினேன் என்று இளையராஜா கூறினார்” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்