JP Nadda: தெலங்கானாவில் மர்ம நபர்கள், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா படத்தை வைத்து கல்லரை அமைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


தெலங்கானா மாநிலம் சௌடுப்பல் மாவட்டத்தில் உள்ள மல்காபூரில் மணலால் மூடப்பட்ட கல்லறையின் ஒரு முனையில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் படத்தை வைத்த  வீடியோ  சமூக வலைதளங்களில் வெளியாகி கட்சித் தலைவர்களிடையே கோபத்தை தூண்டியுள்ளது. இந்த வீடியோவில் கல்லறையைப் போல மணல் மேடாகக் குவித்து, மணல் மேடு மீது புதிய மாலைகள் போடப்பட்டுள்ளது. ஒரு அடையாளப் பலகையின் கீழ் நட்டாவின் புகைப்படம் உள்ளது. இந்த வீடியோவின் முடிவில், நான்கு பேர் அந்த இடத்தை விட்டு விலகிச் செல்வதைப் பார்க்க முடிகிறது.


கட்சித் தலைவர்கள் கண்டனம்


ஜெ.பி.நட்டா படத்தை வைத்து மணல் மூடி கல்லறை அமைத்துள்ள வீடியோவை ஆந்திரப் பிரதேச பாஜக செயலாளர் விஷணுவர்தன் ரெட்டி சமூக வலைதளங்களில் பகிர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, " டி.ஆர்.எஸ் தொண்டர்கள் தான் இதுபோன்ற வேலையில் செய்திருப்பார்கள் என குற்றம் சாட்டியுள்ளார். வருகின்ற நவம்பர் 3ஆம் தேதி முனுகோடு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த சம்பவம் நடந்திருப்பது கட்சித் தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இதுதொடர்பாக, தெலங்கானா பாஜக தலைவர் என்.வி.சுபாஷ் கூறியதாவது, இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிப்போம் என தெரிவித்துள்ளார்.






ஆய்வு செய்ய குழு அமைப்பு


இது தொடர்பாக, யாதாத்ரி புவனகிரி மாவட்ட காவல்துறை துணை ஆணையர் நாராயண்ரெட்டி  கூறியதாவது, இந்த பிரச்னை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதுதொடர்பாக யாரும் புகார் அளிக்கவில்லை. என்ன நடந்தது என்பதை அறிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.


இந்த சம்பவத்தை இந்திய அரசியலில் ஒரு புதிய கீழ்மைத் தனம் என்று கூறிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், தெலங்கானாவில் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்து வருவதால், டி.ஆர்.எஸ் பீதியடைந்துள்ளது. வரும் சட்டசபை தேர்தலில்  அதன் தோல்வி உறுதி. இதுபோன்ற செயலில் டி.ஆர்.எஸ் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.