பெங்களூருவில் உள்ள ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் கேரளப் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


37 வயதான ஸ்ருதி நாராயணன் பெங்களூரில் உள்ள ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் சீனியர் உதவி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2017 ம் ஆண்டு ஸ்ருதிக்கும், கேரளா களிபரம்பு பகுதியை சேர்ந்த அனீஸுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்து நான்கு வருடங்கள் ஆகிய நிலையிலும் இவர்களுக்கு குழந்தை இல்லை. அந்த நான்கு வருடங்களுமே அனீஸ் ஸ்ருதி நாராயணனை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்ரவதை செய்துள்ளார். அதேபோல், சந்தேகத்தின்பேரில் இரண்டு முறை கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. 


இந்தநிலையில், நான்கு ஆண்டுகள் சித்ரவதையை பொறுத்துக்கொண்ட ஸ்ருதி, கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறியாத ஸ்ருதியின் அம்மா தன் மகளிடம் பேசுவதற்காக தொடர்ந்து போன் செய்துள்ளார். மிக நீண்ட நேரமாக யாருமே போன் எடுக்காதநிலையில், பயந்துப்போன அவர், அந்த வீட்டின் காவலாளியை அழைத்து தகவலை தெரிவித்துள்ளார். 


இதையடுத்து, ஸ்ருதி வீட்டின் கதவை தட்டிப்பார்த்தபோது வீடு உள்பக்கமாக பூட்டி இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, வீட்டின் பால்கேனி வழியாக பின் பக்க கதவை உடைத்து பார்த்தபோது படுக்கையறையில் ஸ்ருதி தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த காவலாளி உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த காவல்துறையினர் ஸ்ருதியின் உடலை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 


மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். அப்பொழுது காவல்துறையினருக்கு பல திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. அதில், ஸ்ருதியின் மீது அதிக சந்தேகம் கொண்ட அவரது கணவன் அனீஸ் தொடர்ச்சியாக சித்ரவதை செய்துள்ளார். இவர்கள் படுக்கை அறையில் கேமரா மற்றும் வாய்ஸ் ரெக்கார்ட் மூலம் அனீஸ் ஸ்ருதியை கண்காணித்ததாகவும் தெரியவந்துள்ளது. 


இந்தநிலையில், ஸ்ருதியின் பெற்றோர் அனீஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அனீஸை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண