உத்தராகண்ட் மாநிலம் ஜோஷிமத்தின் சிங்தார் வார்டில் வெள்ளிக்கிழமை அதாவது நேற்று மாலை கோயில் ஒன்று  நிலச்சரிவால் இடிந்து விழுந்ததால், பல வீடுகளில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டது. இதனால் பெரும் பேரழிவு ஏற்படும் என்று குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உள்ளனர். கிட்டத்தட்ட 50 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.






சம்பவம் நடந்தபோது கோயிலுக்குள் யாரும் இருக்கவில்லை என்று உள்ளூர்வாசிகள் கூறியதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, நிலச்சரிவு பாதித்த பகுதியில் இன்று ஆய்வு நடத்துகிறார். மேலும் அவர் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார் என அவரது அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. 


இதற்கிடையில், சாமோலி மாவட்ட நிர்வாகம், வீடுகள் சேதமடைந்து வசிக்கத் தகுதியற்ற குடும்பங்கள் அல்லது வீடற்ற குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து 6 மாதங்களுக்கு தலா 4,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தது. விஷ்ணு பிரயாக் ஜல் வித்யுத் பரியோஜனா ஊழியர்களுக்கான காலனியில் வசிக்கும் 50 குடும்பங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மைத் துறை இயக்குநர் பங்கஜ் சவுகான் தெரிவித்தார்.


ஜோஷிமத்தில் நிலச்சரிவு மற்றும் அதன் தாக்கம் குறித்து "விரைவான ஆய்வு" நடத்த மத்திய அரசு வெள்ளிக்கிழமை ஒரு குழுவை அமைத்தது. சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம், மத்திய நீர் ஆணையம், இந்திய புவியியல் ஆய்வு, மற்றும் தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கம் உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழு "விரைவான ஆய்வு மற்றும் காரணத்தை ஆராயும்" என்று ஜல் சக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள அலுவலக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இக்குழு நிகழ்வு மற்றும் அதன் தாக்கம் " குறித்து மூன்று நாட்களுக்குள் NMCG க்கு அறிக்கை சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மனித குடியிருப்புகள், கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள், உள்கட்டமைப்பு மற்றும் ஆற்றங்கரை அமைப்புகளில் நிலம் மூழ்கியதால் ஏற்படும் பாதிப்புகளை இந்த குழு ஆராயவுள்ளது.  குறிப்பாக மார்வாரி பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நீர்நிலைகளால் அங்குள்ள பல வீடுகள் பல்வேறு அளவுகளில் சேதமடைந்துள்ளன, அதே நேரத்தில் நீர்நிலையிலிருந்து தண்ணீர் தொடர்ந்து அதிகரித்துகொண்டே உள்ளது. இதனால் பாதிப்படைந்த பொதுமக்கள் மறுவாழ்வு கோரி, ஜோஷிமத் தாலுகா அலுவலகத்தில்  தர்ணா நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 


சமோலி மாவட்டத்தில் 6,000 அடி உயரத்தில் அமைந்துள்ள ஜோஷிமத் நகரம், பத்ரிநாத் மற்றும் ஹேம்குந்த் சாஹிப் செல்லும் பாதையில் அமைந்துள்ளது, இது அதிக ஆபத்துள்ள நில அதிர்வு 'மண்டலம்-V’ ஆக உள்ளது. 


PTI இன் படி, உள்ளூர் நகராட்சியின் முன்னாள் தலைவர் ரிஷி பிரசாத் சதி கூறுகையில், ஒரு வருடத்திற்கும் மேலாக நிலச்சரிவு ஏற்பட்டு  வருகிறது, ஆனால் கடந்த பதினைந்து நாட்களில் நிலச்சரிவும் அதன் பாதிப்பும் அதிகமாகியுள்ளது என கூறியுள்ளார்.