உத்தரகண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரம் மண்ணில் புதைந்து வரும் நிலையில், இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த பகுதியில் இருந்து ராணுவ வீரர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட இந்த பகுதி சீன எல்லையான உண்மையான கட்டுப்பாட்டு கோடுக்கு அருகே உள்ளது. ராணுவ வீரர்கள் இடமாற்றம் செய்யப்பட்டது குறித்து பேசியுள்ள ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, பாதுகாப்பு காரணத்தால் எத்தனை ராணுவ வீரர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறித்த தகவலை வெளியிடவில்லை.
"ஜோஷிமத்தை சுற்றியுள்ள 20 ராணுவ முகாம்களுக்கு சேதம் ஏற்பட்டது.தேவைப்பட்டால் மேலும் ராணுவ வீரர்கள் இடமாற்றம் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், நாங்கள் தயார் நிலையிலேயே உள்ளோம்" என மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.
ஆண்டுக்கு ஒரு முறை ராணுவத்தின் தயார் நிலை குறித்து ராணுவ தளபதி உரையாடுவார். அந்த வகையில், இந்தாண்டு நடந்த மாநாட்டில் பேசிய அவர், "நம் தயார் நிலையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை" என்றார்.
ஜோஷிமத்தில் விரிசல் நீண்டு கொண்டே சென்ற நிலையில் பல்வேறு கட்டிடங்கள் சரிந்து வருகிறது. இம்மாதிரியாக நடப்பதற்கு காரணம் என்ன என தெரியாமல் மக்கள் குழம்பி வரும் நிலையில், மாநில அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
நகரம் தானாகவே மண்ணில் புதைவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வருகிறது. மனிதர்களால் நிகழ்ந்த சுற்றுச்சூழல் மாற்றங்கள், இயற்கை போன்றவையே காரணம் என வாடியா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹிமாலயன் ஜியாலஜியின் இயக்குனர் கலாசந்த் சான் தெரிவித்துள்ளார்.
"ஜோஷிமத் பாதிப்புக்கு உள்ளாவதற்கு மூன்று அடிப்படை காரணங்கள் உள்ளன. நூற்றாண்டுக்கு முன்னர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு நிலச்சரிவின் இடிபாடுகளின் மீது உருவாக்கப்பட்டது ஒரு காரணம்.
பூகம்பங்கள் அதிகம் ஏற்படும் மண்டலத்தில் அமைந்திருப்பது இரண்டாவது காரணம். காலநிலை மாற்றம், காலபோக்கில் நிலத்தடியின் கீழ் பாயும் நீரால் கற்களின் பலம் குறைந்தது மூன்றாவது காரணம்" என அவர் கூறியுள்ளார்.
ஜோஷிமத் பத்ரிநாத்தின் நுழைவாயிலாக இருப்பதால், ஹேம்குந்த் சாஹிப், பனிச்சறுக்கு தலமான அவுலியிலில் ஆங்காங்கே கட்டுமானப் பணிகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றன. கட்டுமான பணிகளால் ஏற்படும் அழுத்தம் காரணமாக வீடுகளில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம்.
எல்லா இடங்களிலும் விடுதிகளும், உணவகங்களும் அதிகரித்து வருகிறது. மக்கள் தொகையால் ஏற்பட்ட அழுத்தம் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்ததும் நிலம் மண்ணில் புதைவதற்கு காரணங்களாக சொல்லப்படுகிறது.