கும்பலாக அடித்துக் கொலை செய்தல் மற்றும் கும்பல் வன்முறைக்கு எதிராக கடும் தண்டனை வழங்கும் சட்டத்தை ஜார்கண்ட் மாநிலம் நிறைவேற்றியுள்ளது.

  


2021 வருட கும்பலாக அடித்துக் கொலை செய்தல் மற்றும் கும்பல் வன்முறையை தடுத்தல் (Prevention of Mob Violence and Mob Lynching Bill, 2021)என்றழைக்கப்படும் இந்த சட்ட மசோதாவை இன்று மாநில சட்டப்பேரவையில் மாநிலத்தின் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் தாக்கல் செய்தார். இந்த சட்டமசோதாவுக்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரவித்தனர்.   


சட்ட மசோதாவை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து பேசிய  அமைச்சர், "சமூகத்தின் பலவீனமான பிரிவுகளைச் சேர்ந்தவர்களின் அரசியலமைப்பு உரிமைகளை பாதுகாக்கவும்,  கும்பலாக அடித்துக் கொலை செய்தல் மற்றும் கும்பல் வன்முறையை தடுப்பதற்கும் மசோதா வழிவகை செய்கிறது" என்று தெரிவித்தார்.  



ஜார்கண்ட் சட்டப்பேரவை


மதம், இனம், சாதி, பாலினம். அல்லது பிறந்த இடம், உணவு பழக்க வழக்கங்கள், மொழி, பாலியல் நோக்குநிலை/அடையாளம், அரசியல் சார்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு கும்பல் தன்னிச்சையாகவோ அல்லது திட்டமிடப்பட்டதாகவோ செய்யப்படும் வன்முறை செயல்கள் அல்லது தொடர்ச்சியான  நடவடிக்கைகள் கும்பல் வன்முறை என வரையறுக்கிறது. 


முன்னதாக, இந்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர்  அமித் குமார் மண்டல், " சமூகத்தின் பலவீனமான பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்று மட்டும் குறிப்பிட்டதன் மூலம் வன்முறை சம்பவங்களை ஒரே அளவு கோளில் மதிப்பீடு செய்ய சட்டம் தவறுகிறது. உதாரணமாக, குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது, போலீஸ் கான்ஸ்டபிளான ரத்தன் லால் அடித்துக் கொல்லப்பட்டார். இவரது, மரணம் கும்பல் கொலை என்ற வரையறைக்குள் வருமா? எனவே, தயவு செய்து பலவீனமான பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு பதிலாக குடிமக்கள் என்று திருத்தம் செய்யுங்கள்" என்று வலியுறித்தினார்.


மேலும், " ஜார்கண்ட் பழங்குடியின மக்கள் மரபு ரீதியான பண்பாடு, மற்றும் கலாசாரம் சார்ந்த வகையில் தங்கள் பிரச்சனைகளுக்கு  தீர்வு காண விரும்புகின்றனர். இவர்களை, இத்தகைய சட்டம் குற்றவாளியாக்கும். இந்த சட்டம் ஜார்கண்ட் மக்களுக்கு எதிரானது. ஆண்டி- ஜார்கண்ட் என்றும் தெரிவித்தார்.         


பாஜக உறுப்பினரின் முதலாவது கோரிக்கைகயை மட்டும் ஏற்றுக்கொண்ட அமைச்சர், சட்டத்தில் சாதாரண குடிமக்கள் (Common Citizen) என்று மாற்றம் செய்தார். இந்த சட்ட மசோதாவை ஆதரித்து பேசிய இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) சட்டமன்ற உறுப்பினர் வினோத் சிங் ," வன்முறையாளர்களை  சட்டரீதியாக எதிர்கொள்வது மிக முக்கியமானது. ஆனால், இந்த சட்ட மசோதாவை நிறைவேற்றுவதுல் அவசர போக்கு காணப்படுகிறது. அவை விதிமுறைகளின் படி,  போதிய அளவிற்கு விவாதங்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதைப் பற்றி சட்டத்தில் வழிவகை செய்யப்படவில்லை" என்று தெரிவித்தார்.     



ஜார்கண்ட் மாநில முதல்வர்


ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தால், மேற்குவங்கம், ராஜஸ்தான், மணிப்பூர் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து கும்பல் வன்முறைக்கு எதிராக சட்டமியற்றிய நான்காவது மாநிலமாக ஜார்க்கண்ட் இருக்கும். 


சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும் கும்பல் வன்முறை  சம்பவங்களை அடியோடு ஒடுக்க கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இத்தகைய சட்டத்திருத்தங்கள் உதவும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.