மனித மனம் வக்கிரங்களின் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு அன்றாடம் நிகழும் வித்தியாசமான குற்றச்சம்பவங்களே சாட்சி.


குஜராத்தில் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. குஜராத் மாநிலம் பாவ்நகரில் வசிப்பவர் நீத்தாபென் சார்வியா. 35 வயதான அந்த இளம்பெண் ஒரு நாய்க்குட்டி வளர்க்கிறார். அதற்கு சோனு என்று பெயர் வைத்துள்ளார். இது அவரது அண்டை வீட்டில் வசிக்கும் சுரபாய் பார்வாடுக்கு கடும் ஆத்திரத்தை மூட்டியுள்ளது. ஏனென்றால் சுரபாய் பார்வாட் தனது மனைவியை சோனு என்று செல்லமாக அழைப்பாராம். இதனால், நீத்தாபென் அவரது நாயை சோனு என்று அழைக்கக்கூடாது என்று கூறிவந்துள்ளார். நீண்ட காலமாக வாய் வார்த்தையாக இருந்தது ஒரு நாள் சுரபாய்க்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.


நீத்தாபென்னின் கணவரும் அவரது இரண்டு குழந்தைகளும் இல்லாத நேரத்தில் சுராபாய் தனது சகாக்கள் ஐந்து பேரை சேர்த்துக் கொண்டு நீத்தாவின் வீட்டுக்குள் சென்றுள்ளனர்.


அங்கு தனியாக இருந்த நீத்தாவிடம் நாய்க்கு சோனு என்று பெயர் வைத்து அழைக்கக் கூடாது எனக் கூறியுள்ளார். இருதரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது. ஒருகட்டத்தில் நீத்தா மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துள்ளனர். இதனையடுத்து நீத்தா அலறித் துடிக்க அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். அந்த வேளையில் நீத்தாவின் கணவரும் குழந்தைகளும் வீட்டுக் வந்தனர். பின்னர் நீத்தாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக நீத்தாபென் சார்வியாவின் அண்டை வீட்டாரான சுராபாய் பார்வாட் அவரது சகாக்கள் உள்பட 6 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. கொலை முயற்சி, அத்துமீறல், பெண்ணை அவமதித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஆனால் இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. நீத்தாபென் குடும்பத்திற்கும் அவரது அண்டை வீட்டில் வசிக்கும் சுராபாய் பார்வாட் குடும்பத்திற்கும் பல்வேறு தகராறுகள் இருந்துள்ளன. ஏற்கெனவே தண்ணீர் பிரச்சினைக்காக இரண்டு குடும்பத்தினரும் இதேபோன்று அடிதடியில் ஈடுபட்டு பின்னர் சமரசம் செய்து வைக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் தான் நீத்தாபென் ஒரு நாய்க்குட்டியை வாங்கி அதற்கு சோனு என்று பெயர் வைத்துள்ளார். இதை அவர் வேண்டுமென்றே செய்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்து சுராபாய் பார்வாட் இந்தக் கொலைவெறி சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்றெல்லாம் நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். ஒரு சிறிய விஷயத்துக்குக் கூட சகிப்புத் தன்மை இல்லாமல் நாம் நடந்து கொள்ளும் முறை நம்மைச் சுற்றியுள்ளவர்களை மட்டுமல்ல நம்மையும் பாதிக்கின்றது. நம் சந்ததிகளுக்கும் மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்து நடப்போமாக.