பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் கன்னங்கள் போல் பளபளப்பான, மென்மையாக  சாலை போடப்படும் எனப் பேசி காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.


இது தொடர்பாக அவர் பேசி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 


ஜார்க்கண்ட் மாநில ஜம்தாரா தொகுதி எம்எல்ஏ இர்ஃபான் அன்சாரி. இவர் அண்மையில் தொகுதி மக்களுக்காக ஒரு வீடியோவை வெளியிட்டார்.


அந்த வீடியோவில் அவர், "ஜம்தாரா மக்களே, உங்களுக்கு நான் ஒரு விஷயத்தை உறுதிபடக் கூறுகிறேன். இங்குள்ள ஆதிவாசிகள் நலனுக்காக விரைவில் சர்வதேசத் தரத்தில் 14 சாலைகள் அமைக்கும் பணி தொடங்கும். அந்தச் சாலைகளில் நமது ஆதிவாசிக் குழந்தைகள் பயணிக்கப் போகின்றனர். அந்தச் சாலை எவ்வளவு பளபளப்பாக மென்மையாக இருக்குமென்றால், கங்கனா ரனாவத்தின் கன்னங்கள் போல் இருக்கும் " என்று பேசியுள்ளார்.
அவரது பேச்சுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஜார்க்கண்ட் எதிர்க்கட்சிகளும் இதற்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றன.






ஏற்கெனவே மாஸ்க் சர்ச்சை:


எம்எல்ஏ இர்ஃபான் அன்சாரி அடிப்படையில் ஒரு மருத்துவர். இவர் முகக்கவசம் அணிவது பற்றி ஏற்கெனவே சர்ச்சைக் கருத்தைக் கூறியிருந்தார். ஒரு மருத்துவராகச் சொல்கிறேன் முகக்கவசங்களை நீண்ட நேரம் அணியக்கூடாது. கூட்டமான இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிந்தால் போது. கொரோனா மூன்றாவது அலை குறித்து அஞ்சத் தேவையில்லை. கொரோனா ஏற்பட்டால் அதன் அறிகுறிகள் 5 அல்லது 6 நாட்களிலேயே சரியாகிவிடும் என்று கூறியிருந்தார். நிகழ்ச்சி ஒன்றின்போது முகக்கவசம் அணியாமல் இருந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.


கன்னங்களைக் குறிவைக்கும் அரசியல் பிரமுகர்கள்..


சாலைகளின் தரத்தைக் குறிப்பிட நடிகைகளின் கன்னங்களைக் குறிப்பிட்டுப் பேசுவது அரசியல்வாதிகளுக்கு வழக்கமாகிவிட்டது. அண்மையில் மகாராஷ்டிரா அமைச்சரும், சிவசேனா தலைவருமான குலாப்ராவ் பாட்டீல், தனது தொகுதியான ஜல்காவோன் மாவட்டச் சாலைகளின் பளபளப்பை நடிகை ஹேமாமாலினியின் கன்னங்களுடன் ஒப்பிட்டுப் பேசினார். 




ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், தன்னுடைய தொகுதியில் போடப்பட்ட சாலைகள் குறித்து பேசினார். எதிர்க்கட்சியினரும் மக்களும் தனது தொகுதியில் உள்ள சாலைகளை நேரில் வந்து பார்க்க வேண்டும் என்றார். அதோடு விட்டுவிடாமல் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்ட அவர், நடிகை ஹேமமாலினியின் கன்னம் போல் சும்மா தகதகனு ரோட் எல்லாம் மின்னும் என்றும் கூறினார். அப்படி இல்லை என அவர்கள் கருதும் பட்சத்தில் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிடுவதாகவும் ஏடாகூடமாகப் பேசினார். பின்னர் அந்தக் கௌர்த்துக்காக அவர் மன்னிப்பும் கோரினார்.