ஒவ்வொரு குற்ற வழக்கிலும் காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிர விசாரணைக்கு பிறகு பிடிப்பார்கள். ஒரு சில வழக்குகளில் குற்றவாளிகளை எளிதாக குற்ற சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே பிடிப்பார்கள். அந்தவகையில் காவலர் ஒருவர் குற்றவாளியை திரைப்பட பாணியில் சேஸிங் செய்து பிடித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
இதுதொடர்பாக ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் காவலர் ஒருவர் சினிமா பாணியில் இரண்டு நபர்களை சாலையில் சேஸிங் செய்து பிடித்து விசாரணை செய்வது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ வேகமாக வைரலானது.
இந்நிலையில் அந்த காவலரை அழைத்து மங்களூரு காவல்துறை ஆணையர் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக மங்களூரு காவல்துறை ஆணையர் சசிகுமார், “எங்களுடைய காவல்துறை ஆய்வாளர் வருண் குமார் செல்போன் திருடிய நபரை உடனடியாக விரட்டி பிடித்து கைது செய்துள்ளார். மேலும் அந்த நபர் கொடுத்த தகவலின் பெயரில் மேலும் இரண்டு குற்றவாளிகளையும் காவல்துறை பிடித்துள்ளது. இவர்கள் மூன்று பேரும் சில மாதங்களாக இப்பகுதியில் செல்போன் திருடி வந்துள்ளது தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.
மேலும் அந்த காவலர் வருண்குமாரை நேரில் அழைத்து ஆணையர் சசிகுமார் பாராட்டி பரிசளித்துள்ளார். இந்த காவலரின் இந்தச் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க: நம்பலன்னாலும் அதான் நெசம்: பொண்ணு கேரளாவில், பையன் நியூசிலாந்தில்... ஆன்லைனில் தாலிகட்டி திருமணம்..!