அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக தலைமையிலான கூட்டணி முனைப்பு காட்டி வருகிறது. அதேநேரம், பாஜகவை வீழ்த்தும் ஒற்றை நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்துள்ளன.
இதற்காக பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், நாடு முழுவதும் பயணம் செய்து எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் பிகார் மாநிலம் பாட்னாவிலும் இரண்டாவது கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் நடைபெற்றது.
தேர்தலில் பின்பற்ற வேண்டிய வியூகங்கள் உள்பட பல விவகாரங்கள் குறித்து இந்த கூட்டங்களில் ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாக, இரண்டாவது கூட்டத்தில் எதிர்க்கட்சி கூட்டணிக்கு இந்தியா (இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி) என பெயர் சூட்டப்பட்டது.
பாஜகவுடன் கூட்டணி வைக்கிறதா மதச்சார்பற்ற ஜனதா தளம்?
இந்த நிலையில், பாஜகவும், தன்னுடைய கூட்டணியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அதன் முதல் முயற்சியாக, டெல்லியில் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை நடத்தியது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியான நிலையில், டெல்லி கூட்டத்தில் அந்த கட்சி கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த கூட்டத்தில், அதிமுக, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்ட போதிலும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி கலந்து கொள்ளவில்லை. இதனால், வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் அக்கட்சி கூட்டணி அமைக்குமா இல்லையா என்பதில் தொடர் குழுப்பம் நீடித்து வந்தது.
பாஜகவுக்கு ஷாக் கொடுத்த தேவகவுடா:
தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் தேவகவுடா. கூட்டணி குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், வரவிருக்கும் மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்து போட்டியிடும்.
ஐந்து, ஆறு, மூன்று, இரண்டு, ஒன்று என எத்தனை தொகுதியில் வெற்றி பெற்றாலும், மக்களவை தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம். நாங்கள் வலுவாக உள்ள தொகுதிகளில் மட்டுமே எங்கள் தொண்டர்களிடம் கலந்தாலோசித்து வேட்பாளர்களை நிறுத்துவோம்" என்றார்.
முன்னதாக, இதுகுறித்து கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான பசவராஜ் பொம்மை, சமீபத்தில் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தார். "கலந்தாலோசித்த பிறகு, எதிர்கால அரசியல் முன்னேற்றங்களை தீர்மானிப்போம். எங்கள் தலைமையும், எச்.டி.தேவ கவுடாவும் சேர்ந்து இதில் முடிவு எடுப்பர்" என்றார்.
பாஜக மூத்த தலைவரும் கர்நாடக முன்னாள் முதலமைச்சருமான பி.எஸ். எடியூரப்பா, இதுகுறித்து பேசுகையில், "எனது கட்சியும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியும் இணைந்து கர்நாடக காங்கிரஸ் அரசை எதிர்த்துப் போராடும்" என்றார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய எச்.டி.குமாரசாமி, "மக்களவை தேர்தலுக்கான கூட்டணி குறித்து முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்படும்" என்றார்.