Japanese women : ஹோலி பண்டிகையின்போது ஜப்பானிய இளம்பெண் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பாலியல் தொல்லை:


ஹோலி பண்டிகை மார்ச் 8ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட்டப்பட்டது. ஹோலி பண்டிக்கைக்காக ஜப்பானில் இருந்து 24 வயதுடைய இளம்பெண் ஒருவர் இந்திய வந்திருந்தார். அப்போது டெல்லியில் நடைபெற்ற ஹோலி பண்டிகையின்போது ஜப்பானிய இளம்பெண் ஒருவரை இளைஞர்கள் 4,5 பேர் சேர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்துவது போன்று வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


அதில், சாலையில் சென்று கொண்டிருந்த ஜப்பானிய இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் பிடித்து அவர் மீது வண்ணப்பொடிகளை தூவுவதுடன் அந்த பெண் மீது முட்டையை உடைப்பது போன்றும், தண்ணீரை பீய்ச்சி அடித்து, அத்துமீறுவது போன்றும் காட்சிகள் இருந்தன. மேலும், அந்த இளைஞர்களிடம் தப்பி முயன்ற அந்த இளம்பெண்ணை, ஒரு நபர் வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து கன்னத்தில் அறைவது போன்று காட்சிகள் இருந்தன.  


3 பேர் கைது


இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி அனைவரும் பேசும் பொருளாக மாறியது. மேலும் இந்த சம்பவம்  தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டப்பட்டது. இந்த சம்பவம் பற்றி விரிவான அறிக்கை சமர்பிக்க கோரி தேசிய மகளிர் ஆணையம் டெல்லி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. 


இணையத்தில் வெளியான வீடியோவின் அடிப்படையில் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட ஜப்பானிய பெண்ணை அடையாளம் காண உதவி செய்யமாறு ஜப்பான் தூரகத்திற்கு டெல்லி போலீசார் மின்னஞ்சல் அனுப்பினர்.


தீவிர விசாரணை மேற்கொண்ட டெல்லி போலீசார் ஜப்பானிய இளம்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஒரு சிறுவர் உட்பட 3 பேரை கைது செய்தனர். அதே சமயத்தில் வீடியோவில் இருந்த ஜப்பானிய இளம்பெண் நேற்று முன்தினமே இந்தியாவில் இருந்து வங்கதேசம் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.


"இந்தியாவை நேசிக்கிறேன்"


ஹோலி பண்டிகையின்போது பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட இளம்பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளை பதிவிட்டுள்ளார். அதில், "ஹோலி பண்டிகையில் பகலில் ஒரு பெண் தனியாக வெளியே செல்வது ஆபத்தானது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் எனது நண்பர்கள் 35 பேருடன் ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்றேன். ஆனால் எனக்கு துரதிர்ஷ்டவசமாக இந்த சம்பவம் நடத்துள்ளது. சம்பவத்தன்றே நான் இந்தியாவை விட்டு  வெளியேறி வங்கதேசம் சென்றுவிட்டேன்" என்றார்.


மேலும், நான் இந்தியாவை நேசிப்பதாகவும், பல முறை இந்தியாவிற்கு வந்திருக்கிறேன். இது கண்கவர் நாடு. இதுபோன்ற ஒரு சம்பவம் நடத்திருப்பதால் நான் இந்தியாவை வெறுக்க மாட்டேன்; எப்போது நேசிப்பேன். இந்த சம்பவம் தொடர்பாக  போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதனால் அடுத்த ஆண்டு முதல் ஹோலி பண்டிகையில் பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல்கள் குறையும் என்று நம்புவதாக”  பாதிக்கப்பட்ட இளம்பெண் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.