உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாட்டில் உள்ள குடிசை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
தீயில் கருகி உயிரிழந்த குழந்தைகள்:
உத்தரபிரதேச மாநிலத்தின் ரூரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஹர்மாவ் பஞ்சரதேரா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சதீஷ்குமார், அவரது மனைவி காஜல் மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்துக்கு மின் கசிவு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. 5 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்த உடன், அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயன்றனர் - தீயணைப்பு வாகனங்களும் தீயை அணைக்க கிராமத்திற்கு விரைந்தன, ஆனால் துரதிஷ்ட வசமாக அவர்களை காப்பாற்ற முடியவில்லை.
தீயை அணைக்க முயன்ற சதீஷின் தாயாருக்கும் இந்த சம்பவத்தில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தகவல் கிடைத்ததும் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். தீ விபத்துக்கான காரணத்தை அறிய தடயவியல் குழு மற்றும் மோப்ப நாய் படைகளும் ஈடுபடுத்தப்பட்டன.
5 பேர் உயிரிழப்பு:
"சதீஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். ஷார்ட் சர்க்யூட் காரணமாக ஓலை கூரையில் இருந்த மின்விளக்கில் தீப்பிடித்து, இதில் ஏற்பட்ட தீ விபத்தில் அவர்கள் உடல் கருகி இறந்தனர்" என்று அப்பகுதியை சேர்ந்த உதய்பால் கூறினார். "தீயில் சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிருடன் எரிந்த தகவல் எங்களுக்கு கிடைத்தது. தடயவியல் குழு, தீயணைப்பு துறை அதிகாரிகள் மற்றும் மோப்ப நாய் படை குழு கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர்" என்று கான்பூர் டெஹாட் எஸ்பி தெரிவித்தார்.
சதீஷின் தாயார் சிகிச்சை பெற்று வரும் மாவட்ட மருத்துவமனைக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி நேஹா ஜெயின் நேரில் சென்று பார்வையிட்டார். "ஹரமாவ் கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு தம்பதியும் அவர்களது மூன்று குழந்தைகளும் உயிரிழந்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்," என்று அவர் கூறினார்.
மயிலாடுதுறையிலும் தீ விபத்து:
சமீபத்தில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிடைக்கழி கிராமத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த வைக்கோலை ஏற்றிக் கொண்டு டாரஸ் லாரி ஒன்று கும்பகோணத்தை நோக்கி சென்றுள்ளது. அப்போது, திருவிடைக்கழி அடுத்த பெருங்குடி என்ற பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக லாரியில் இருந்த வைக்கோல் சாலையில் இருந்த மின் கம்பியில் உரசியதால் தீப்பிடித்தது. வைக்கோலில் பற்றிய தீ மளமளவென பரவி லாரியிலும் தீப்பிடித்தது. இதனை அடுத்து சுதாரித்துக் கொண்ட லாரி ஓட்டுநர், உடனடியாக லாரியை சாலையில் இருந்து இறக்கி வயலில் பாதுகாப்பாக நிறுத்தினார்.