மும்பையின் அடையாளங்களில் ஒன்று கூட்டமான மின்சார ரயில். கூடவே விதவிதமான சாலையோர சிற்றுண்டி கடைகள். அது மட்டுமல்லாது குறைந்த விலையில் பேரம் பேசி வாங்கக் கூடிய பொருட்கள். இப்படிப்பட்ட மும்பையில் ஜப்பான் நாட்டின் தூதர் ஹிஷிரோ சுசுகி ஒரு குட்டி கலகல பயணம் மேற்கொண்டார். அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிக் கொண்டிருக்கிறது.
ஒரு புகைப்படத்தில் ஜப்பான் தூதர் ஹிரோஷி சுசுகி மின்சார ரயிலில் நிற்பதைக் காண முடிகிறது. ஆனால் அதில் என்ன ஆச்சரியம் என்றால் அந்த ரயிலில் கூட்டமே இல்லை. அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்த ஹிரோஷி சுசுகி நான் மும்பையில் இருக்கிறேன் என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளார். அதன் கீழ் நெட்டிசன்கள் பலரும் மும்பை ரயில் தானா? கூட்டமே இல்லாத மும்பை மின்சார ரயிலா? என்றெல்லாம் வியந்து கேட்டுள்ளனர். இன்னும் பலர் மும்பைக்கு வருக வருக என்று வரவேற்றுள்ளனர்.
இன்னொரு ட்வீட்டில் அவர் பரபரப்பான வர்த்தக வீதியில் ஒரு வெள்ளை நிற சட்டையைப் பார்த்து கொண்டிருக்கிறார். அந்த புகைப்படத்தில் அவர் ஒரு சட்டையை தொட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதில் ரூ.100 ஒரே விலை என்று எழுதியுள்ளது. அந்தப் புகைப்படத்திற்கு என்ன ஒரு பேரம்? இதை நான் வாங்கலாமா? என்று எழுதியுள்ளார்.
அதன் கீழ் ஒரு ட்விட்டராட்டி, மும்பை.. கனவுகளின் நகரம். இங்கே குழப்பங்களுக்கும் குறைவில்லை. இங்கே சாகசங்களுக்கும் பஞ்சமில்லை. கூட்டமான தெருக்களில், மக்கள் நிரம்பிய ரயில்களில் உங்களின் நகைச்சுவை உணர்வை தொலைத்துவிடாமல் கடந்துவர முயற்சி செய்யுங்கள். வடா பாவ் சாப்பிடுங்கள். ஜூன் என்பதால் பருவமழையை அனுபவியுங்கள். மும்பை உங்கள் மீது அதன் மாயத்தை செய்யட்டும் என்று உணர்வுப்பூர்வமாக பதிவிட்டுள்ளார்.
இவ்வாறாக பயணங்களை முடித்துக் கொண்ட ஜப்பான் தூதர் சுசுகி, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் ஆகியோரையும் சந்தித்தார்.
முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுடனான சந்திப்பு குறித்து ஹிரோஷி சுசிகி தனது ட்விட்டரில், நான் மகாராஷ்டிரா முதல்வர் திரு.ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்தேன். மகாராஷ்டிராவுடன் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தேன். அந்த சந்திப்பு நல்ல பலனளிக்கக் கூடியதாக அமைந்தது.
அதே போல் துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸையும் சந்தித்தேன். அந்த சந்திப்பிலும் ஜப்பான் - மகாராஷ்டிரா தொழில் ஒத்துழைப்பு பற்றி ஆலோசித்தோம் என்று கூறியிருந்தார்.
ஹிரோஷியின் ட்வீட்கள் அத்தனையும் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.