ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதன் மீதான தினசரி விசாரணை, கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசுக்கும் மனுதாரர் தரப்புக்கும் இடையே பரபர வாதம் நடைபெற்று வருகிறது.


ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட வழக்கு:


கடந்த 12 நாள்களாக நடந்து வரும் விசாரணையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதேபோல, ஜம்மு காஷ்மீரில் நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் யார் என வரையறுக்கும் உரிமை அம்மாநில சட்டப்பேரவைக்கே உள்ளது. இந்த அதிகாரத்தை அம்மாநில சட்டப்பேரவைக்கு வழங்கியது சட்டப்பிரிவு 35ஏ ஆகும்.


நேற்றைய விசாரணையில், சட்டப்பிரிவு 35ஏ குறித்து பேசிய இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், "இந்த குறிப்பிட்ட சட்டப்பிரிவு, மற்ற இந்தியர்களுக்கான அடிப்படை உரிமைகளை மறுத்துள்ளது" என தெரிவித்திருந்தார். அதே நேரத்தில், சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு, முழு மாநில அந்தஸ்தை திரும்பபெற்றபோது கூட்டாட்சி தத்துவம் பின்பற்றபட்டதா? என மத்திர அரசை நோக்கி கேள்வி எழுப்பினார்.


மீண்டும் மாநிலமாகிறதா?


இந்த நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையில், "ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்ற முடியுமா? ஒரு மாநிலத்திலிருந்து யூனியன் பிரதேசத்தை பிரிக்க முடியுமா? தேர்தல் எப்போது நடத்தப்படும்" என அடுக்கடுக்கான கேள்விகளை இந்திய தலைமை நீதிபதி எழுப்பினார்.


"இது ஒரு முடிவுக்கு வர வேண்டும். உண்மையான ஜனநாயகத்தை எப்போது மீட்டெடுப்பீர்கள் என்பதற்கான குறிப்பிட்ட காலக்கெடுவை எங்களிடம் கொடுங்கள். இதை பதிவு செய்ய விரும்புகிறோம்" என்றும் இந்திய தலைமை நீதிபதி கூறியுள்ளார்.


மத்திய அரசு பதில்:


இதற்கு, மத்திய அரசின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அஸ்ஸாம், திரிபுரா, அருணாச்சல பிரதேசம் ஆகியவற்றை எடுத்தக்காட்டாக சுட்டிகாட்டி வாதிட்டார். "நான் மத்திய அரசின் கருத்துகளை கேட்டுள்ளேன். யூனியன் பிரதேச அந்தஸ்து என்பது நிரந்தரம் அல்ல. நாளை மறுநாள் பாசிட்டிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உள்ளேன். லடாக் யூனியன் பிரதேசமாகவே இருக்கும்.


நாடாளுமன்றத்தில் (மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது குறித்து) மத்திய அரசு பதில் தெரிவித்திருந்தது. முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பியதும், மாநில அந்தஸ்து வழங்கப்படும். மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது விரைவில் நடைபெறும் என்பதற்கு சான்றாக ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன" என சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.