நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக, விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்கள் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பல்வேறு விதமான சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகள்:
பயிர் விளைச்சல் குறைவாக இருப்பது, விவசாயப் பொருட்களின் விலை நிலையாக இல்லாமல் ஏற்ற இறக்கமாக இருப்பது, பயிர் செய்வதற்கு அதிக செலவாவது, கடன் சுமை, கடன் வாங்குவதற்கு போதுமான வசதி இல்லாதது, போதுமான உள்கட்டமைப்பு வசதி இல்லாதது என எண்ணிடலங்கா பிரச்னைகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.
இதை எதிர்கொள்ள முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்வது பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிராவின் சந்திராபூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 13 விவசாயிகள் உட்பட இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான 7 மாதத்தில் மட்டும் 73 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவிக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளில் 446 விவசாயிகள் உட்பட சந்திராபூர் மாவட்டத்தில் 2001 முதல் 2023 வரை 1,148 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளனர்.
இப்படிப்பட்ட சூழலில், மகாராஷ்டிராவில் உள்ள தலைமைச் செயலகத்தில் புகுந்த விவசாயிகள், அம்மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களின் நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த காவல்துறை முயற்சி செய்து வருகிறது.
தலைமைச் செயலகத்தில் புகுந்த விவசாயிகள்:
தலைமை செயலக கட்டிடத்தின் முதல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வலையில் சில போராட்டக்காரர்கள் குதித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பாதுகாப்பு வலையில் குதித்த விவசாயிகளை போலீசார் துரத்துவதைக் காண முடிகிறது. அந்த இடத்தில் இருந்து போராட்டக்காரர்களை காவல்துறை அதிகாரிகள் இழுத்துச் செல்வதையும் வீடியோவில் காணலாம்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் கைது செய்யப்பட்டு மரைன் டிரைவ் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தலைமைச் செயலக கட்டிடத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் மாநில அமைச்சர் தாதாஜி பூசே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இதுகுறித்து மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், "நான் இன்று விவசாயிகளை இங்கு அழைத்திருந்தேன். அவர்கள் (மாநில அமைச்சர்) தாதா பூசேவை சந்தித்துப் பேசியுள்ளனர். அவர்களின் பிரச்னைகள் குறித்து 15 நாட்களில் ஆய்வு செய்து தீர்வு காணப்படும்" என்றார்.