இந்தியாவை விட அதிக மக்கள்தொகையை கொண்ட சீனா நமது அண்டை நாடாகும். இந்தியா – சீன இடையே பல லட்சம் கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்று வந்தாலும், இரு நாடுகள் இடையே எல்லைப்பிரச்சினை அவ்வப்போது வெடித்து வருகிறது.


குறிப்பாக, இந்தியாவின் பல பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்திய – சீன எல்லையில் உள்ள அருணாச்சல பிரதேசத்தை தங்களுக்கு சொந்தம் என்று சொல்லி வருகிறது. மேலும், அருணாச்சல பிரதேச எல்லைப்பகுதியில் அவ்வப்போது உள்ளே நுழையவும் சீனா முயற்சித்து வருகிறது.


புதிய வரைபடம்:


இதனால் இந்தியா – சீனா இடையே கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது சீனா ஒரு புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த பகுதியில் இந்தியாவிற்கு சொந்தமான அருணாச்சல பிரதேசத்தை இணைத்துள்ளது. அந்த வரைபடத்தில் இந்தியாவிற்கு சொந்தமான பகுதிகளை அக்‌ஷயா சின் என்று குறிப்பிட்டுள்ளதுடன், அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் என்று குறிப்பிட்டுள்ளது.




சீனா வெளியிட்டுள்ள இந்த புதிய வரைபடத்தில் இந்தியாவின் நிலப்பகுதிகள் மட்டுமின்றி பிற நாடுகளின் எல்லைப்பகுதிகளையும் சீனா உரிமை கோரியுள்ளது. தைவான் நாட்டின் சில பகுதிகளையு தனது வரைபடத்தில் இணைத்துள்ளது.


சீனா அடாவடி:


அமெரிக்கா, ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய ராணுவ பலத்தை கொண்ட நாடு என்பதால் சீனா அவ்வப்போது இந்தியாவிடம் இதுபோன்ற அடாவடித்தனத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவும் சீனாவின் அத்துமீறலுக்கு நேரடியாக கண்டனம் தெரிவித்தும், பல முறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


ஏற்கனவே இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. கம்பும், கட்டைகள், கற்கள் என இரு தரப்பு வீரர்களும் சரமாரியாக மோதிக்கொண்டனர். கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 15-ந் தேதி நிகழ்ந்த இந்த மோசமான சம்பவத்தில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 45 பேர் உயிரிழந்ததாக உளவுத்துறை தகவல்கள் வெளியாகிய நிலையில், சீனாவோ நான்கு பேர் மட்டும்தான் உயிரிழந்ததாக கூறியது.




இந்தியாவிற்கு எதிரான செயல்பாடுகளில் மறைமுகமாக சீனா செயல்பட்டு வருவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், எல்லை விவகாரத்தில் சீனா தொடர்ந்து இந்தியாவிடம் வாலாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. எல்லையில் சாலை அமைப்பது, கட்டிடம் கட்டுவது, பாலம் கட்ட முயற்சிப்பது போன்ற சீனாவின் செயல்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்தியா வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.


மேலும் படிக்க: Indians Google Search: ஆபாச வீடியோக்கள் அதிகம் தேடப்படுவது எந்த நாட்டில்? இந்தியாவுக்கு எந்த இடம்? வெளியான அதிர்ச்சி தகவல்


மேலும் படிக்க: Cauvery Water: காவிரி மேலாண்மை ஆணையத்தில் 24,000 கன அடி நீர் திறக்க வலியுறுத்த திட்டம்.. தமிழ்நாடு அதிகாரிகள் தகவல்..