உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து திருத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், நாடு முழுவதும் முதலிடம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 17 ஆகக் குறைந்துள்ளது.
முதல் முறை வெளியான தேர்வு முடிவுகளின்படி, நாடு முழுவதும் மொத்தம் 13,16,268 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதற்கிடையே நேற்று வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட முடிவுகளில் 13,15,853 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் நாடு முழுவதும் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை 415 குறைந்துள்ளது.
தமிழகத்திலும் குறைவு
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 1,02,920 பேர் தேர்வு எழுதி, 89,426 பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் தற்போது எண்ணிக்கை குறைந்துள்ளது. திருத்தப்பட்ட தேர்வு முடிவுகளின் அடிப்படையில், 89,198 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
17 பேர் மட்டுமே முதலிடம்
ஜூன் மாதம் முதலில் வெளியான நீட் தேர்வு முடிவுகளில் தமிழகத்தைச் சேர்ந்த 8 மாணவர்கள் உட்பட மொத்தம் 67 மாணவர்கள் முழு மதிப்பெண்ணுடன் முதலிடம் பெற்றிருந்தனர். தொடர்ந்து கருணை மதிப்பெண்கள் விவகாரத்தால் அது 64 ஆகக் குறைந்தது.
தமிழ்நாட்டில் எத்தனை?
மீண்டும் திருத்தப்பட்ட வினாத்தாள் மாற்றங்களுக்கு பின், 17 பேர் மட்டுமே முழு மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளனர். தற்போது தமிழகத்தில் இருந்து பி.ரஜனீஷ் என்ற மாணவர் மட்டுமே முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை அடுத்து அதிகம்பேர் தேர்ச்சி அடைந்த பட்டியலில் தமிழகத்திற்கு 4வது இடம் கிடைத்துள்ளது.
ஜூன் மாதத் தேர்வு முடிவின்போது நாட்டிலேயே முதலிடம் பிடித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் சையது ஆரிபின் யூசுஃப் 715 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். இவர் தற்போது 26-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
கூடுதல் தகவல்களுக்கு: https://exams.nta.ac.in/NEET/images/press-release-for-the-re-revised-result-declaration-of-the-neet-ug-2024-revised-as-on-26-july-2024.pdf
இதில் தேர்வுக்கு விண்ணப்பித்த, எழுதிய, தேர்ச்சி பெற்ற, பெறாத மாணவர்களின் விவரங்கள், மொழி, சாதி வாரியாகத் தேர்வர்களின் தேர்ச்சி விகிதம், மாநிலங்கள் வாரியாகத் தேர்வர்களின் தேர்ச்சி விகிதம், முதலிடம் பெற்றவர்களின் விவரங்கள் உள்ளிட்ட அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு, இளநிலை நீட் (NEET UG) தேர்வுக்கு 24,06,079 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் 23,33,297 மாணவர்கள் மே 5அன்று நடத்தப்பட்ட தேர்வில் பங்கேற்றனர். NEET UG முடிவுகள் 2024 ஜூன் 4, 2024 அன்று அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட விவகாரம் சர்ச்சையானதை அடுத்து, அவர்களுக்கு மட்டும் ஜூன் 23, 2024 அன்று மறுதேர்வு நடத்தப்பட்டது. அதற்கான முடிவுகள் ஜூன் 30, 2024 அன்று அறிவிக்கப்பட்டன.
சர்ச்சைக்குரிய கேள்விக்கு இரண்டு விடைகள்
நீட் தேர்வில் இயற்பியல் தாளில் கேட்கப்பட்ட 19வது கேள்விக்கு நான்கு ஆப்ஷன்கள் தரப்பட்டன. அதில், இரண்டு ஆப்ஷன்கள் சரியானது என சர்ச்சையானதையடுத்து, இரண்டு ஆப்ஷன்களுக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டது. எனினும் நீதிமன்ற உத்தரவால், ஒரு விடை மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.