ஜம்மு பகுதியில் அமைந்துள்ள இந்திய விமானப்படையின் தளத்தில் நேற்று அதிகாலை ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் விமானப்படை தளத்தில் உள்ள தொழில்நுட்ப அறையை குறி வைத்து நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் எந்தவித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை. ஜம்மு பகுதியில் அமைந்துள்ள இந்த விமானப்படை தளம் பாகிஸ்தான் எல்லையிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. எனவே இந்தத் தாக்குதலுக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 






இந்நிலையில் ட்ரோன்கள் எப்படி செயல்படுகிறது? அவற்றின் மூலம் உள்ள ஆபத்து என்னென்ன?


ட்ரோன்கள் எப்படி செயல்படும்?




ட்ரோன்கள் எனப்படும் சிறிய ஆளில்லாத விமான தொழில்நுட்பம் ரிமோட் உதவியுடன் சென்சார் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. பொதுவாக ட்ரோன்களின் மூக்கு பகுதியில் தான் ரிமோட்களிடம் இருந்து வரும் சென்சார் பட்டு அதை இயக்கும். இந்த ட்ரோன் பறக்கும்போது ஏற்படும் அதிர்வுகள் மற்றும் சத்தத்தை குறைக்க தேவையான பொருட்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவேதான் விமானம் பறக்கும் போது வரும் சத்தம் ட்ரோன்கள் பறக்கும் போது வருவதில்லை. மேலும் மிகவும் மென்மையான பொருட்கள் மூலம்  ட்ரோன்கள் வடிவமைக்கப்படுவதால் அதன் எடையும் குறைவாக இருக்கும். அத்துடன் நீண்ட தூரத்திற்கு இதை பறக்கவிட முடியும். மனிதர்கள் செல்ல சவாலாக உள்ள இடங்களுக்கு ட்ரோன்கள் எளிதாக செல்ல முடியும் என்பதால் இது மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 


சிறிய ட்ரோன்களை ரேடாரில் தெரியாதா?


ட்ரோன்கள் பல நாட்டின் ராணுவத்திற்கு பெரிய உதவியாக அமைந்துள்ளன. குறிப்பாக சிறிய ரக ட்ரோன்களை ரேடார் மூலம் கண்டுபிடிக்க முடியும். ஆனால் அதற்கு ரேடாரின் அதிர்வெண் (frequency) மாற்றங்கள் செய்யவேண்டும். இதன் காரணமாக தான் ஒரு சில சிறிய ட்ரோன்களை ரேடார் கண்டறிய முடிவதில்லை. ஆகவே ரேடார் மூலம் அனைத்து வகை ட்ரோன்களையும் தற்போது கண்டறிய முடியும். அதற்கு ரேடார் தயார் நிலையில் இருக்க வேண்டுவதுதான் முக்கியம். 




 


ட்ரோன்கள் மூலம் உள்ள ஆபத்துகள்?


ட்ரோன்கள் மூலம் பல நல்ல விஷயங்கள் உள்ளது. குறிப்பாக ட்ரோன் கேமரா கழுகு பார்வையில் கண்காணிக்க உதவும். அதேபோல் ட்ரோன் மூலம் பொருட்களை டெலிவரி செய்வது, சானிடைசர் தெளிப்பது, பயிர்களை ஆய்வு செய்வது, பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பது உள்ளிட்ட பல நல்ல பயன்கள் உள்ளன. இருப்பினும் அனைத்து தொழில்நுட்பங்களை போல் இதிலும் சில ஆபத்தான விஷயங்கள் உள்ளன. இந்த ட்ரோன் மூலம் தீவிரவாதிகளுக்கு ஆயுதம் மாற்றுவது, போதை பொருட்களை மற்றொரு நாட்டின் எல்லைக்குள் அனுப்புவது போன்ற விஷயங்களை எளிதாக செய்ய முடியும். 


அதேபோல் ட்ரோன்கள் மூலம் ராணுவத்தினர் மற்றும் தீவிரவாதிகள் தங்களின் இலக்கை குறி வைத்து தாக்குதல் நடத்த முடியும். சமீப காலங்களாக ட்ரோன் தாக்குதல் அதிகரித்து வர தொடங்கியுள்ளன. இதன் காரணமாக ட்ரோன் தொழில்நுட்பம் மிகவும் ஆபத்தான ஒன்றாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க:AIIMS Fire | டெல்லி எய்ம்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து..!