டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் இன்று அதிகாலை 5 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. மிகவும் குறுகிய நேரத்தில் தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதன் காரணமாக,  பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. 


தவகல் தெரிவிக்கப்பட்ட உடன் ஏழு தீயணைப்பு ஊர்திகள் மூலம் வெறும் 35 நிமிடங்களில் தீயை அணைக்கும் பணி முடிக்கப்பட்டதாக டெல்லி தீயணைப்பு துறை  தெரிவித்தது. 


இந்த சம்பவம் குறித்து டெல்லி காவல்துறை துணை ஆணையர் (சவுத் டிஸ்ட்ரிக்ட்) அதுல் குமார் தாக்கூர் செய்தியாளர்களிடம் பேசுகையில்," சிகிச்சைப் பிரிவுக்கு அருகில் உள்ள காலி அறையில் மின்கசிவு காரணமாக இந்த விபத்து எற்பட்டிருக்கலாம்.  காலை சரியாக 5.15 மணியளவில் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்" என்று தெரிவித்தார். 






 


 


மேலும், "நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்தால் பெரும் சேதமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து முழுமையாக விசாரிக்கப்படும்" என்றும் தெரிவித்தார்.


டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 10 நாட்களில் ஏற்பட்ட இரண்டாவது தீவிபத்து இதுவாகும். முன்னதாக, ஜூன் 17ம் தேதி , இரவு 10.30 மணியளவில் மருத்துவமனையின் ஒருங்கிணைந்த வளாகத்தின் 9வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. உரிய நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்திற்கான காரணமும் இதுவரை கண்டறியப்படவில்லை. 






எய்ம்ஸ் மருத்துவக் கழகம் தன்னாட்சி பெற்ற பொதுத்துறை உயர்கல்வி மருத்துவக் கல்லூரிக் குழுமம் ஆகும். இந்த மருத்துவமனைகள் நாடாளுமன்ற சட்டத்தின்படி தேசிய முதன்மைக் கழகங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. டெல்லியின் தென்பகுதியில் உள்ள அன்சாரி நகரில் அமைந்துள்ள புதுடெல்லி எய்ம்ஸ், இந்தியாவில் உள்ள மிக முக்கியமான மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையாக விளங்குகிறது. நாட்டின் உயரிய மருத்துவமனையில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுத்துவது நாட்டு மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துவதாய் அமைகிறது.