ராஜஸ்தானில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தனது சொந்த பணத்தில் காலணிகளை வாங்கி தந்தது. மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்ட போது, உயிரைக் காப்பாற்ற அழுக்கு நீரில் குதித்தது. அரிதான ரத்த வகை தேவைப்படுவோருக்கு ரத்த வங்கியை தொடங்கியது.


ராஜஸ்தான் மாநிலத்தின் ஹானஸ்ட் ராஜ்:


தான் பணியாற்றிய இடங்களில் எல்லாம், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் அரசு அலுவலக கட்டிடங்களை மாற்றி அமைத்தது என மற்ற அரசு அதிகாரிகளுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக இருப்பவர் ஜெய்ப்பூர் மாவட்ட ஐஏஎஸ் அதிகாரி ஜிதேந்திர சோனி.


தன்னுடைய பணியில் அசாத்திய நெறிமுறையை கடைபிடிப்பவர் ஜிதேந்திர சோனி என அவருடன் பணியாற்றிய அதிகாரிகள் அவரை புகழ்கின்றனர். தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்ட அவர், "நான் ஆர்வத்துடனும் இரக்கத்துடனும் வேலை செய்கிறேன்.


மக்கள் எங்களிடம் வரும்போது, ​​​​அவர்கள் நம்பிக்கையுடன் வருகிறார்கள். நாம் அவர்களுக்குச் செவிசாய்த்து அவர்களுக்கு உதவினால் அது அமைப்பின் மீதான அவர்களின் நம்பிக்கையை பலப்படுத்துகிறது. அவர்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்கிறது.


மற்ற அதிகாரிகளுக்கு எடுத்துக்காட்டு:


இது பல குடும்பங்களின் வாழ்வை மேம்படுத்துகிறது. அவர்களின் நிதி நிலையையும் மேம்படுத்துகிறது. ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக மட்டும் இல்லாமல், ஒவ்வொருவரும் தங்களால் முடிந்தால் சமுதாயத்திற்கும் மற்றவர்களுக்கும் ஏதாவது செய்ய வேண்டும்.


நீங்களும் ஆர்வத்துடனும் இரக்கத்துடனும் பணிபுரிந்தால், முடிவுகள் எப்போதும் நன்றாக இருக்கும். நான் மாவட்ட கலெக்டராகவும், பேரிடர் மேலாண்மை படை தலைவராகவும் இருந்தபோது, எனது கடமையை மட்டுமே செய்தேன்" என்றார்.


கடந்த 2016ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், ஜலோரில் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்தபோது, ​​குழந்தைகள் வெறுங்காலுடன் குளிரில் நடுங்குவதை அவர் கண்டுள்ளார். குழந்தைகளால் செருப்பு வாங்க முடியாது என்று சொன்னபோது ஆழ்ந்த மனஉளைச்சலுக்கு ஆளான அவர், தனது சொந்தப் பணத்தின் மூலம் அவர்களுக்குக் காலணிகளை வாங்கி தந்தார். அவரின் இந்த செயல், பின்னர் இயக்கமாக மாறியது.


பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலணி வாங்கி தர நன்கொடையாளர்கள் தானாக முன்வந்து பணம் கொடுக்கின்றனர். இந்த இயக்கம், இப்போது ராஜஸ்தானின் கிராமப்புற மாவட்டங்களில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.