Watch Video: மதுபோதையில் லாரியை கொண்டு ஓட்டலின் மீது இடித்த ஓட்டுனரை போலீசார் கைது செய்துள்ளனர்.


ஓட்டலின் மீது லாரியை விட்ட ஓட்டுனர்:


புனேவில் இரவு உணவு மறுக்கப்பட்டதால் குடிபோதையில் ஓட்டுநர் ஒருவர்,  ஓட்டலின் மீது லாரியை எடுத்துச் சென்று இடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஹிங்கங்கானில் உள்ள ஹோட்டல் கோகுல் அருகே நின்றுகொண்டிருந்த பொதுமக்களால் பதிவுசெய்யப்பட்ட வீடியோவில், ஓட்டல் கட்டிடத்தின் மீது ஓட்டுனர் தனது டிரக்கை பலமுறை மோதிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.  முன்னதாக ஓட்டலின் மீது இடிப்பதற்காக லாரியை எடுக்கும்போது, வளாகத்தில் இருந்த கார் ஒன்றின் மீதும் அந்த லாரியை கொண்டு ஓட்டுனர் மோதியுள்ளார்.






நடந்தது என்ன?


தகவலின்படி, விபத்து ஏற்படுத்திய ஓட்டுனர் சோலாப்பூரில் இருந்து புனே நோக்கி பயணித்து, ஹோட்டல் கோகுலில் நிறுத்தினார். பின்னர் உள்ளே சென்று உணவு கேட்டுள்ளார். அவர் மதுபோதையில் இருந்த நிலையில், ஹோட்டல் உரிமையாளர் ஓட்டுனருக்கு உணவு தர மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஓட்டுனர் தனது லாரியில் அமர்ந்து ஹோட்டல் கட்டிடத்தை சேதப்படுத்தத் தொடங்கினார். அவரை நிறுத்துவதற்காக சிலர் லாரி மீது கற்களை வீசியுள்ளனர். ஆனால், அதை சற்றும் பொருட்படுத்தாமல் கட்டிடத்தின் மீது மீண்டும் மீண்டும் லாரியால் மோதியுள்ளார். இறுதியில் டிரக்கின் சக்கரங்கள் நகராமல் நின்றபோது அவர் நிறுத்தியுள்ளார். இதனிடையே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மதுபோதையில் இருந்த ஓட்டுனரை கைது செய்தனர்.