மத்தியப் பிரதேச மாநிலம் சாகரில் உள்ள ஜெயின் கோயிலில் பிரசாதமாக வைத்திருந்த பாதாம் பருப்பை சிறுவன் ஒருவன் எடுத்துச் சென்றுள்ளான். இதையடுத்து, 11 வயது சிறுவனை மரத்தில் கட்டி வைத்து அடித்ததாகக் கூறப்படுகிறது. 






சம்பவத்தை விவரித்துள்ள மோதிநகர் காவல் நிலைய பொறுப்பாளர் சதீஷ் சிங், "சிறுவனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், கரீலாவில் உள்ள ஜெயின் சித்தாத்த மந்திரின் மதகுரு ராகேஷ் ஜெயின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


மரத்தில் கட்டப்பட்டிருந்த சிறுவன் அழுவதையும், தன்னை விடுவிக்கும்படி கோருவதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் சனிக்கிழமை வெளிவந்தது. புகாரின்படி, சிறுவன் வியாழக்கிழமை கோயில் வாசல் அருகே நின்று கொண்டிருந்தபோது பாதாம் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டான். ராகேஷ் ஜெயிந் மற்றொருவரின் உதவியுடன் குழந்தையை மரத்தில் கட்டி வைத்து அடித்ததாக கூறப்படுகிறது.


குற்றம் சாட்டப்பட்ட ராகேஷ் ஜெயின் மீது பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று அலுவலர் ஒருவர் கூறியுள்ளார்.


பிறப்பின் அடிப்படையில் பாகுபாட்டை கற்பிக்கும் சாதிய அமைப்புக்கு எதிராக பல தலைவர்கள் தீவிரமாக இயங்கிய நிலையிலும், தற்போது வரை அதன் தாக்கம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.


குறிப்பாக, சாதிய ஆணவ படுகொலைகள் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கு முற்றிப்புள்ளி வைத்தபாடில்லை. சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்புகளையும் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்த வந்த போதிலும், காவல்துறை மெத்தனமான நடந்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.






இதற்கென தனி சட்டம் இயற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழ்நாட்டில், இளவரசன், கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்குகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. முற்போக்கு மாநிலம் எனக் கூறப்படும் தமிழ்நாட்டிலேயே இதுபோன்ற கொலைகள் நடைபெறுவது பிரச்னையின் தீவிரத்தன்மை நமக்கு உணர்த்துகிறது.