சென்னையில் சிகிச்சை பெற்ற ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ (56) இன்று காலமானார். அவரது மறைவுக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். 






ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோவுக்கு நுரையீரல் பிரச்சனை இருந்தது. கொரோனோ தொற்று பாதிக்கப்பட்டபோது அவரது நுரையீரல் மோசமாக பாதிக்கப்பட்டது.  கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக ஜகர்நாத் மஹ்தோ அவதிப்பட்டு வந்தார்.


நுரையீரல் பாதிக்கப்பட்ட மஹ்தோ ராஞ்சியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்து சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மஹ்தோவுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டிருந்த நிலையில், திடீரென சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்துள்ளார். 


இதுகுறித்து ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "சென்னையில் சிகிச்சை பெற்ற அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ உடல்நலக் குறைவால் இன்று காலமானார். நம்ம புலி ஜகர்நாத் மஹ்தோ இனி இல்லை. மாபெரும் கிளர்ச்சியாளர், போராடும் தன்மை கொண்டவர், கடின உழைப்பாளி ஜகர்நாத் மஹ்தோ” என்று ஹேமந்த் சோரன் புகழஞ்சலி செலுத்தினார்.  மேலும், இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.