வளர்ந்து வரும் தொழில் நுட்பம் மனிதர்களுக்கு நன்மைகளை எந்த அளவிற்கு தருகிறதோ அதேபோல் தீமைகளையும் தருகிறது. செயற்கை நுண்ணறிவு என்ற தொழில் நுட்பம், தொடர் வளர்ச்சி அடைந்து வரும் சூழலில், பல சவால்களையும் மனிதர்களுக்கு தந்து வருகிறது. இந்த தொழில்நுட்பத்தை தற்போது தீய வழியில் பயன்படுத்தும் போக்கும் அதிகரித்து காணப்படுகிறது.


சமீபத்தில், இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவரின் வீடியோவை எடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா முகத்தை வைத்து எடிட் செய்திருந்தனர். அது இணையத்தில் மிகப் பெரியளவில் விவாதத்தைக் கிளப்பியது. எடிட் செய்யப்பட்ட வீடியோ என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அந்த வீடியோ உண்மையானதை போன்றே இருந்தது.


குறிவைக்கப்படும் பெண்கள்?


இது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதங்கத்தை பதிவு செய்தனர். மேலும் இது போன்று நடைபெறமால் தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அதேபோல் நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் கஜோல் ஆகியோர் தொடர்பான மார்பிங் செய்யப்பட்ட டீப் பேக் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும், சில நடிகைகளை ஆபாசமாக சித்தரித்தும் புகைப்படங்கள் வெளியானது.


இந்த பிரச்னை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், டீப் பேக் வீடியோக்களுக்கு எதிராக மத்திய அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. போலியாக எடிட் செய்யப்பட்ட வீடியோக்கள் உருவாக்குவோருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதமும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்ற விதியை நினைவூட்டி மத்திய அரசு அறிக்கை வெளியிட்டிருந்தது.


இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதள நிறுவனத்தின் நிர்வாகிகளுடன் விரைவில் பேச உள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.


"இன்னும் தீவிரமாக இருக்க வேண்டும்"


செய்தியாளர்களிடம் இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "சமீபத்தில், டீப் பேக் பிரச்னையில் நிறுவனங்களுக்கு அரசாங்கம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு, சமூக வலைதள நிறுவனங்கள் பதிலளித்தன. ஆனால், அத்தகைய விவகாரத்தின் மீது நடவடிக்கை எடுப்பதில் நிறுவனங்கள் இன்னும் தீவிரமாக இருக்க வேண்டும்.


நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆனால், இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று நினைக்கிறோம். விரைவில், அனைத்து வலை தள நிறுவனங்களின் கூட்டத்தை நடத்த உள்ளோம். ஒருவேளை அடுத்த 3-4 நாட்களில், அவர்களை பிரச்னையை தீர்க்க அழைத்து, அதைத் தடுப்பதற்கு சமூக தளங்கள் போதுமான முயற்சிகளை மேற்கொள்வதை உறுதி செய்வோம்" என்றார்.


கூட்டத்துக்கு கூகுள், மெட்டா நிறுவனங்களின் நிர்வாகிகள் அழைக்கப்படுவார்களா என எழுப்பிய கேள்விக்கு, "ஆம்" என மத்திய அமைச்சர் பதில் அளித்தார்.


டீப் பேக் வீடியோக்கள் குறித்து கவலை தெரிவித்திருந்த பிரதமர் மோடி, "போலி வீடியோக்கள் பரவுவது மிகவும் கவலை அளிக்கிறது. செயற்கை நுண்ணறிவு செயலி மூலம் இதுபோன்ற வீடியோக்கள் தயாரிக்கப்படுகின்றன. தொழில்நுட்பம் பொறுப்புடன் கையாளப்பட வேண்டும். ஊடகங்கள் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" என்றார்.