Tirumala Tirupati: புதுமணத் தம்பதிகளுக்கு ஒரு நாளைக்கு 20 டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் ஒதுக்கி உள்ளது. 


திருப்பதி கோயில்:


உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏழுமலையான தரிசிக்க வருகின்றனர். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர் திருப்பதி மலைக்கு வாகனங்கள் மற்றும் மலைப்பாதையில் பாத யாத்திரையாகவும் சென்று பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். மேலும், இலவச தரிசனம், ரூ.300 கட்டணம், விஐபி என பல்வேறு முறைகளில் பக்தர்கள் சுவாமி  தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.


புதுமண தம்பதிகளுக்கான தரிசன டிக்கெட்


இந்நிலையில், புதுமண தம்பதிகள் திருப்பதி ஏழுமலையானின் கல்யாண உத்சவத்தை காண தேவஸ்தான நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.  சிலர் திருப்பதியில் ஏழுமலையான் சன்னிதியில் திருமணம் செய்வார்கள். சிலர் திருமணம் முடித்த கையோடு மணக் கோலத்தில் திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செய்வார்கள். இந்நிலையில், புதுமண தம்பதிகள் ஏழுமலையானின் கல்யாண உத்சவத்தில் புதுமண தம்பதிகள் பங்கேற்க டிக்கெட்டுகளை ஒதுக்கீடு செய்துள்ளது. புதுமணத் தம்பதிகள் திருமலைக்கு வந்து ஸ்ரீவாரி கல்யாணத்தில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், புதுமணத் தம்பதிகளுக்கு ஒரு நாளைக்கு 20 டிக்கெட்டுகளை ஒதுக்கி உள்ளது தேவஸ்தானம். ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் 1000 ரூபாய் ஆகும். இந்த டிக்கெட்டுகளை திருமண உற்சவம் மற்றும் பிரத்யேக தரிசனம் ஆகிய இரண்டிற்கும் பயன்படுத்தலாம்.


எப்படி பெறுவது?


புதுமணத் தம்பதிகள் முதலில் சிஆர்ஓ அலுவலகத்தில் ஒள்ள அர்ஜிதா சேவா லக்கி கவுண்டருக்கு செல்ல வேண்டும்.  அங்கு, தம்பதிகளின் புகைப்படம், ஆதார் கார்டை சமர்ப்பித்து பதிவு செய்ய வேண்டும். இந்த சிறப்பு சேவையை பெற புதுமணத் தம்பதிகள் திருமணம் செய்ய ஒரு வாரத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்.  இந்த புதுமணத் தம்பதிகள் நேரடியாக கல்யாண உற்சவ டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


வைகுண்ட ஏகாதசி:


டிசம்பர் மாதம் 23ஆம் தேதி 2024 ஜனவரி மாதம் 1ஆம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வெகு விமர்சையாக வைகுண்ட ஏகாதசி திருவிழா கொண்டாடப்படும்.  இந்த நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இதனால், நாள் ஒன்றுக்கு 300 ரூபாய் தரிசனம் மூலம் 20 ஆயிரம் பக்தர்களும், இலவச தரிசன மூலம் 50 ஆயிரம் பக்தர்களும் வைகுண்ட வாசல் பிரவேசம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இலவச தரிசன டிக்கெட் வழங்குவதற்காக திருப்பதியில் 10 இடங்களில் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் 10 நாட்களுக்கு  5 லட்சம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.